

சென்னை: ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜகவில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார்.
ஆந்திரா, ஜார்க்கண்ட் உட்பட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அண்மையில் நியமனம் செய்தார். இவர்களில் 6 பேர் புதிதாக நியமிக்கப்பட்டனர். 7 ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டனர். தமிழக பாஜக மூத்த தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று (பிப்.15) சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், தனது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் சி.பி.ராதாகிருஷ்ணன் ராஜானாமா செய்தார். இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில்,"இன்று சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக அலுவலகத்திற்கு வந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் அளித்துள்ளார். அவரின் விலகல் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவரின் அடுத்தக் கட்டப் பணி சிறப்பாக இருக்க வேண்டும். பிரதமரின் கரங்களை அவர் வலுப்படுத்த வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.