கோவை அருகே கல்லூரி மாணவர்கள், வடமாநில தொழிலாளர்கள் மோதல்

கோவை அருகே கல்லூரி மாணவர்கள், வடமாநில தொழிலாளர்கள் மோதல்
Updated on
1 min read

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள கண்ணம்பாளையத்தில் தனியார் கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரி நிர்வாகத்துக்கு சொந்தமான விடுதியும் அருகே உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். விடுதியிலேயே மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. உணவு வழங்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விடுதியில் உள்ள மாணவர்கள் சாப்பிடுவதற்காக கேன்டீனுக்கு சென்றனர். மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. பணியில் இருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் மாணவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தனர். அப்போது மாணவர்கள் சிலர் கூடுதலாக அசைவ உணவு தரும்படி கேட்டனர். அதற்கு, பணியில் இருந்த தொழிலாளர்கள், அதிகமாக தர முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த அந்த மாணவர்கள், விடுதிக்குள் சென்று, சக மாணவர்களிடம், கேன்டீனில் நடந்த விவரங்களை தெரிவித்தனர். பின்னர், மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, கேன்டீனில் இருந்த வடமாநில தொழிலாளர்களிடம் இதுதொடர்பாக கேட்டனர்.

அப்போது இவ்விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. மாணவர்கள், அங்கிருந்த சில வடமாநில தொழிலாளர்களை தாக்கினர். இதையறிந்த அங்கிருந்த மற்ற வடமாநிலத் தொழிலாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விடுதி மாணவர்களை தாக்கினர்.

இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டி உள்ளிட்ட பொருட்களை எடுத்து வீசியெறிந்து தாக்கிக் கொண்டனர்.

மோதல் குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீஸார், இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்தனர். இரு தரப்பினரையும் பிரித்து சமரசப்படுத்தினர். இந்த மோதலில் 6 மாணவர்கள், 10 வடமாநிலத் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் விஜயன் கூறும்போது, ‘‘அசைவ உணவு அதிகமாக வழங்குமாறு மாணவர்கள், வடமாநில இளைஞர்களிடம் கேட்டுள்ளனர். அவர்களுக்கு மொழி புரியாததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது கல்லூரி வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருக்கிறது. பிரச்சினை எதுவும் நடைபெறவில்லை. பொதுமக்கள், பெற்றோர்கள் அச்சப்பட வேண்டியதில்லை’’ என்றார்.

மாணவர்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் மோதிக் கொண்டது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சூலூர் போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in