இந்தியா - இலங்கை இடையே நல்லுறவை பிரதிபலிக்கும் யாழ் கலாச்சார மையம்

இந்திய நிதியுதவியில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மையம்.
இந்திய நிதியுதவியில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மையம்.
Updated on
1 min read

ராமேசுவரம்: இந்திய நிதி உதவியில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மையம் இருநாட்டு நல்லுறவை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக பிப்.9-ம் தேதி மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அவருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்றனர். இவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தில் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் அமைச்சர் எல். முருகன், வட மாகாணத்தில் இந்திய நிதியுதவியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள 250 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பிப்.10-ம் தேதி மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீஸ்வரர் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் அங்கு இந்திய அரசு நிதியுதவியுடன் நடைபெற்றுவரும் கோயில் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு இந்திய தூதரகத்தினர் மற்றும் கோயில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த அமைச்சர் எல்.முருகன், இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை குறித்தும், இதனை மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் எனக் கேட்டுகொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டு இலங்கை பயணத்தின்போது 11 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மையத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதன் பணிகள் நிறைவடைந்த நிலையில். பிப்.11-ம் தேதிகலாச்சார மையத்தை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் இலங்கை அமைச்சர்கள் விதுர விக்ரமநாயக, டக்ளஸ் தேவானந்தா, காதர் மஸ்தான், இந்திய தூதர் கோபால் பாக்லே ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது உரையில், தனித்துவமிக்க இந்த கலாச்சார மையத்தை நிர்மாணித்தமைக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். இக்கலாசார மையம்இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவை பிரதிபலிக்கிறது என்றார்.

அமைச்சர் எல்.முருகன் தனது உரையின்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயிலும் பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கான இந்திய அரசின் நிதியுதவித் திட்டத்தையும் அறிவித்தார்.

நல்லூரில் நடைபெற்ற யாழ். கம்பன் விழாவில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு அபிஷேகம் செய்யக் கூடிய பால் முன்பு தினமும் இலங்கையின் நெடுந்தீவிலிருந்து வந்துள்ளது. நெடுந்தீவிலிருந்து ராமேசுவரத்துக்கு மீண்டும் பால் கொண்டு வர வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in