

கோவை: கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் குற்றச்சம்பவங்களைப் பார்க்கும் போது தமிழக அரசுக்கு சட்டம், ஒழுங்கு மீது அக்கறை இல்லை என்பது தெரிகிறது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளது. கோவை போன்ற பரபரப்பான நகரில் நடைபெறும் கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களைப் பார்க்கும் போது தமிழக அரசுக்கு சட்டம், ஒழுங்கு மீது அக்கறை இல்லை என்பது தெரிகிறது.
ஈரோடு இடைத்தேர்தலில் மட்டும் கவனம் செலுத்தாமல் அனைத்து மாவட்ட மக்கள் பாதுகாப்பு மற்றும் நலனில் அரசு அக்கறை காட்ட வேண்டும். தமிழகத்தில் சொத்துவரி, மின்கட்டண உயர்வை அமல்படுத்தி விட்டு எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குற்றம் சாட்டுவதை ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், பின்பும் தொடர்ந்து திமுக வாடிக்கையாக கொண்டுள்ளது.
ஆளுநராக நியமிக்கப்படுபவர் எவ்வாறு செயல்படுவார் என்பதை கவனத்தில் கொண்டே நியமனங்கள் செய்யப்படுகின்றன. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எத்தகைய நடைமுறையை அவர்கள் பின்பற்றினர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் அனைவரின் பின்னணியிலும் ஆர்எஸ்எஸ் உள்ளது உண்மை தான். அந்த இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல. சமூக கலாச்சார இயக்கம். இதை முதலில் புரிந்து கொண்டு அரசியல் கட்சியினர் பேச கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.