மத்திய, மாநில அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் ஓசூரில் விற்பனை

ஓசூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மீன்  சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள்.
ஓசூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மீன் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள்.
Updated on
1 min read

ஓசூர்: ஓசூர் மீன் சந்தையில் மத்திய, மாநில அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் விற்பனை மற்றும் வளர்ப்பை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழிவு நீர், ரசாயன கழிவு நீர், குளம், குட்டை உள்ளிட்ட அசுத்தமான நீர் நிலைகளில் வாழும் தன்மை கொண்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி காற்று சுவாச மீனாகும். இவை இடைவிடாது பிற மீன்களை உண்டு வாழும் தன்மை கொண்டவை. மேலும், 8 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியது.

அழிப்பது கடினம்: இவ்வகை மீன்கள் நீர் நிலைகளில் நுழைந்து விட்டால் இவற்றை அழிப்பது கடினம். மேலும், இவை மிகக் குறைந்த நீரிலும் இனப்பெருக்கம் செய்யக் கூடியவை. நன்னீர் மீன்கள் மற்றும் அவற்றின் முட்டைகளை இவை உணவாக்கிக் கொள்வதால், பாரம்பரிய மீன்கள் அழியும் நிலையுள்ளது.

இவ்வகை மீன்களில் உள்ள ஈயம், அலுமினியம், இரும்பு உள்ளிட்டவையால், இதனை உண்போருக்குத் தோல் வியாதிகள், ஒவ்வாமைகள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

குட்டை அமைத்து வளர்ப்பு: இதனால், இவ்வகை மீன்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்நிலையில், ஓசூர் கெலவரப்பள்ளி அணை மற்றும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரங்களில் சிலர் குட்டை அமைத்து ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்து, சந்தைகளில் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

குறிப்பாக, வட மாநிலங்களுக்கு விற்பனைக்குச் செல்கிறது. அண்மை காலமாக ஓசூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மீன் சந்தையில் இவ்வகை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் தன்மை தெரியாமல் பலர் வாங்கிச் செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மதுபான பார்களில் விற்பனை - இது தொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது: அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் சந்தையில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், மதுபான பார்களில் உள்ள கடைகளில் இவ்வகை மீன் உணவுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் தன்மை தெரியாமல் வாங்கி பலரும் சாப்பிடுகின்றனர்.

இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓசூர் மாநகராட்சிக்குத் தகவல் அளித்தோம். அதிகாரிகள் ஓசூர் மீன் சந்தையில் பெயரளவுக்குச் சோதனை நடத்தி விட்டுச் சென்று விட்டனர். எனவே, இவ்வகை மீன் வளர்ப்பு மற்றும் விற்பனையைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் தனிக் குழு அமைத்துக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in