Published : 15 Feb 2023 02:41 PM
Last Updated : 15 Feb 2023 02:41 PM

ஒகேனக்கல் குடிநீர் விநியோகத்தில் குளறுபடி - பாதுகாக்கப்பட்ட நீருக்கு ஏங்கும் மக்கள்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே வனத்தின் நடுவில் அமைந்துள்ள, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையம். (கோப்புப் படம்)

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் செயலாக்கத்தில் நிலவும் குளறுபடிகளால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் நோக்கம் நிறைவேறாத நிலை ஏற்பட்டுள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீரில் புளூரைடு வேதிப் பொருள் நிறைந்துள்ளது. இந்த நீரை குடிநீராக பருகும்போது மனிதர்கள் புளூரோசிஸ் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு வந்தது. புளூரோசிஸ் பாதிப்பு என்பது மனித உடலில் எலும்பு, பல் உள்ளிட்ட பகுதிகளின் வலிமையை குறைத்து நாளடைவில் மனிதர்களை முடக்கி விடும்.

இதையடுத்து, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி இருமாவட்ட மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி மூலம் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர், அதிமுக ஆட்சியின்போது பணிகள் நிறைவுற்று, கடந்த 2013-ம் ஆண்டு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகம் தொடங்கி வைக்கப்பட்டது.

அன்று முதல் திட்டத்தின் திறன் அளவுக்கு ஏற்ற தண்ணீர், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தினமும் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளிடம் இந்த தண்ணீர் சேர்ந்த பின்னர், பற்றாக்குறையை சரிகட்டும் விதமாக பல இடங்களில் நிலத்தடி நீரையும் கலந்தே குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகள், 10 பேரூராட்சிகள், 1 நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்பு நிர்வாகங்கள் உள்ளன. இவை அனைத்திலும் குடிநீர் விநியோகத்தில் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.

இது குறித்து, பென்னாகரத்தைச் சேர்ந்த சுற்றுலா மற்றும் கலாச்சார ஆய்வாளர் பிரணவ குமார் கூறியது: சில ஊராட்சி நிர்வாகங்கள், ஒகேனக்கல் குடிநீரை காலையிலும், நிலத்தடி நீரை மாலையிலும் என குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கின்றன. ஆனால், பல உள்ளாட்சி அமைப்புகள் குடிநீரில் அவ்வப்போது நிலத்தடி நீரை கலந்து விநியோகம் செய்கின்றன.

இதையறிந்த, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கடந்த 2021-ம் ஆண்டு தருமபுரி மற்றும் ஒகேனக்கல்லில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர், விரைவில் கலப்பட குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படி சில மாதங்கள் மட்டுமே ஒகேனக்கல் குடிநீர் கலப்படம் இல்லாமல் விநியோகிக்கப்பட்டது.

இதனால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் நோக்கம் நிறைவேறாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் 2-ம் கட்ட கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டம் நிறைவேறினால் அனைத்து வீடுகளுக்கும் போதிய அளவு ஒகேனக்கல் தண்ணீர் கிடைக்கும். அதுவரை, குறைந்த அளவில் விநியோகித்தாலும் கலப்படம் இல்லாத தண்ணீரை வழங்க வேண்டும், என்றார்.

உள்ளாட்சி நிர்வாகப் பிரிவு அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, ‘முறையான தகவலுடன் ஒகேனக்கல் குடிநீரை ஒரு நாளிலும், நிலத்தடி நீரை ஒரு நாளிலும் வழங்குமாறு தான் வலியுறுத்தி வருகிறோம். இருப்பினும், சில உள்ளாட்சி நிர்வாகங்களில் குளறுபடிநடப்பதாக தெரிகிறது. இதை தடுக்கவும், இரண்டாம் கட்ட குடிநீர் திட்டம் நிறைவேறவும் போதிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். சில மாதங்கள் மட்டுமே ஒகேனக்கல் குடிநீர் கலப்படம் இல்லாமல் விநியோகிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x