

ஈரோடு: பேனா நினைவுச் சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, எதிர்க்கட்சிகளின் வயிற்றெரிச்சலைக் காட்டுகிறது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்துள்ள அவர் கூறியதாவது: எங்கள் கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. கூட்டணிக்கு மதிப்பு கொடுத்து, நாங்கள் போட்டியிட முதல்வர் ஸ்டாலின் வாய்ப்பு வழங்கினார். ஆனால், எதிரணியில் தமாகா போட்டியிட்ட தொகுதியை அநியாயமாக பிடுங்கி, அதிமுக போட்டியிடுகிறது.
எங்களது வெற்றி ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்து வருகிறது. தோழமைக் கட்சி போட்டியிடும் இந்த தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி பணியாற்றுகிறார். பாஜகவிடம் இருந்து விலகி இந்த தேர்தலை சந்திப்பேன் என பழனிசாமி அறிவித்து இருக்கிறார். அண்ணாமலை, மோடியின் படங்களுடன் வந்தால் இந்த தொகுதி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.
தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஒன்றாகி விடுவர். பேனா நினைவுச்சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, எதிர்க்கட்சிகளின் வயிற்றெரிச்சலைக் காட்டுகிறது. பிரபாகரனை ஆதரிக்கும் வைகோ, திருமாவளவன், சீமான் ஆகியோர் நெடுமாறன் கருத்தை ஏற்கவில்லை. அவர்கள் சந்தேகத்துடன் தான் சொல்கிறார்கள். அவர் இருந்தால் நலமுடன் இருந்து விட்டு போகட்டும், என்றார்.