

சென்னை: பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாடகமாடுகின்றன என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அதானி நிறுவனத்துக்கு எஸ்பிஐ கடன் வழங்கியதையும், அதானி நிறுவனத்தின் பங்குகளை எல்ஐசி வாங்கியதையும் குறிப்பிட்டு, பொதுத் துறை நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. இவற்றுக்கு ஏற்கெனவே அந்த நிறுவனங்கள் பதில் அளித்துவிட்டன. ஆனாலும், எதிர்க்கட்சிகள் தேவையின்றி கூச்சலிட்டு, நாடாளுமன்றத்தை செயல்பட அனுமதிக்க மறுக்கின்றன.
ஏற்கெனவே திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த காங்கிரஸ் ஆட்சியில், கிங்பிஷர், லேன்க்கோ இன்ப்ரா, பூஷன் ஸ்டீல், ஜேபி அஸோஸியேட்ஸ், யுனிடெக், மோனெட் இஸ்பாட் மற்றும் ஐவிஆர்சிஎல் போன்ற நிறுவனங்களில், எல்ஐசி மற்றும் எஸ்பிஐ முதலீடு செய்ததுடன், பல நூறு கோடிகளை இழந்தன. இதற்கு முக்கியக் காரணம் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்தான்.
எனவே, பொதுத் துறை நிறுவனங்களின் செல்வத்தை இழக்கச் செய்ததற்காக மக்கள் முன் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்.
எனவே, பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல நாடகமாடுவதை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.