

மதுரை: பிப்.14, காதலர் தினமான நேற்று மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பூங்காக்களில் காதலர்களை தேடி அறிவுரை கூறச் சென்ற இந்து மக்கள் கட்சியினர், யாரும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
காதலர் தினமான நேற்று காதலர்களை தேடிப்பிடித்து அறிவுரை கூறுவோம் என இந்து மக்கள் கட்சி அறிவித்திருந்தது. இது தொடர்பாக பிரசுரங்களையும் அந்த அமைப்பினர் வெளியிட்டிருந்தனர். அதில் கலாச்சார சீர்கேடு, எதிர்கால சமுதாயம் குறித்து பெற்றோர், குடும்பத்தினர், இளைஞர்கள் சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.
காதலுக்கு எதிர்ப்பு இல்லை. காதலர் தினத்தை தான் எதிர்ப்பதாக இந்த அமைப்பு குறிப்பிட்டிருந்தது. இது குறித்த பிரசுரங்களை வழங்கி, அறிவுரை கூற காதலர்களை தேடி இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கணபதி சுப்ரமணியன், தென் மண்டலத் தலைவர் அன்பழகன் தலைமையிலான நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள பூங்காங்களுக்கு நிர்வாகிகளுடன் சென்றனர்.
ஆனால் இதை முன்பே அறிந்ததால் காதலர்கள் யாரும் தென்பட வில்லை. இதனால் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களுடன் போலீஸாரும் பாதுகாப்பாகச் சென்றனர்.