

முதல்வர் கே.பழனிசாமி தலைமை யில் தமிழக அமைச்சரவை கூட் டம் நாளை நடைபெற உள்ளது. தலைமைச் செயலகத்தில் நாளை (மே 25) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக முதல்வர் பழனிசாமி நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். பிரதமரை அவர் இன்று சந்தித்துப் பேச உள்ளார். இந்தச் சூழலில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
வறட்சி, குடிநீர் பற்றாக் குறையை சமாளிக்க நிதி வழங்க வேண்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் மனுவாக அளிக்க இருக் கிறார். அதன் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அதிமுக எம்எல்ஏக்கள் தனித்தனி குழுக்க ளாக முதல்வரை சந்தித்துப் பேசி வருகின்றனர். அதிமுக எம்எல்ஏக் கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என முதல்வரிடம் முன்னாள் அமைச்சர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் துறைவாரி யான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலை வர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதிமுக எம்எல்ஏக்களின் கோரிக்கைகள், சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டுவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
நீட் தேர்வு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாததால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை. இதனால் மாணவர்களும், பெற் றோர்களும் குழப்பம் அடைந் துள்ளனர். இது தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.