

தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் மாணவர்கள் யாரும் 200 மதிப்பெண் பெறவில்லை.
பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் இனி ரேங்க் பட்டியல் வெளியிடப்படாது என தமிழக அரசு நேற்று அறிவித்த நிலையில் முதன்முறையாக ரேங்க் பட்டியல் இல்லாத தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
பாடவாரியாக 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தை அரசு தேர்வுத்துறை வெளியிட்டது. அதன்படி, கணிதத்தில் 3,656 பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.வேதியியல் பாடத்தில் 1,123 பேரும் இயற்பியலில் 187 பேரும் சென்டம் வாங்கியுள்ளனர்.
உயிரியல் பாடத்தில் 221 பேரும், தாவரவியலில் 22 பேரும், விலங்கியலில் 4 பேரும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள்.
அதிக எண்ணிக்கையாக வணிகவியல் பாடத்தில் 8,301 பேரும், அதற்கு அடுத்தபடியாக கணக்குப்பதிவியல் பாடத்தில் 5,597 பேர் 200 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
புள்ளியியல் பாடத்தில் 68 பேரும், நுண்ணுயிரியல் பாடத்தில் 5 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 1,647 பேரும், வணிக கணிதம் பாடத்தில் 2,551 பேரும், வரலாறு பாடத்தில் 336 பேரும், பொருளாதாரம் பாடத்தில் 1,717 பேரும் 200 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் யாரும் 200-க்கு 200 மதிப்பெண் எடுக்கவில்லை.