

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்துக்குப் பிறகும் குடிநீர்த் தொட்டிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், வருங்காலங்களில் இது போன்ற சம்பவம் வேறு எங்கும் நடக்காமல் இருக்கும் வகையில், குடிநீர்த்தொட்டிகளை முறையாக பாதுகாத்து பராமரிப்பதில் ஊரக வளர்ச்சித் துறையினர் அக்கறை காட்டவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமாரவேல் கூறியது: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் பகுதிக்கு செல்வதற்கான ஏணியின் நடுவில் இரும்பு கதவு அமைத்து பூட்டி பராமரித்து வந்திருந்தால் இந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். இந்த சம்பவத்துக்கு பிறகாவது தமிழகம் முழுவதும் இந்த நடைமுறையை முறையாக அமல்படுத்தி இருக்க வேண்டும். அதையும் அரசு செய்யவில்லை.
மாதம் 2 முறை சுத்தம் செய்ய வேண்டும்: மேலும், மாதத்துக்கு 2 முறை குடிநீர்த் தொட்டிகள் சுத்தம் செய்ய வேண்டும் என்பது ஏட்டளவில் மட்டுமே உள்ளது. அதை கண்டிப்பாக நடைமுறைப் படுத்த வேண்டும் என்றார்.
இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, ‘‘வேங்கைவயல் சம்பவத்துக்குப் பின்னர் மேல்நிலை குடிநீர்த் தொட்டிகளில் பொருத்தப்பட்டுள்ள ஏணிகளில் உள்ள கதவுகளைப் பூட்டி வைக்குமாறும், மாதத்துக்கு 2 முறை குடிநீர்த்தொட்டியை சுத்தம் செய்யவும் அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.