

பெரிய விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது”
''பிரதமர்- முதல்வர் சந்திப்பு வெளிப்படையாக இருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் பங்கீட்டுக்கு அமைத்து ஜூன் 12ல் தண்ணீர் பெற்று தர பிரதமரிடம் முதல்வர் உத்தரவாதம் பெற வேண்டும். அதனை பிரதமர் அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்.
பெரிய விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த அறிவிப்பு உயர் நீதிமன்ற தீர்ப்பினை அவமதிப்பதாகும், விரைவில் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்.
காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு பிரச்சினைகளிலும், நீட் தேர்வு, கடன் தள்ளுபடி, மீனவர்கள் பிரச்சினை, ஹைட்ரோ கார்பன், எரிவாயு திட்டம் உள்ளிட்ட தமிழக வாழ்வாதார. பிரச்சினைகளில் மத்திய அரசு எதிராக செயல்படுவதை . கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி தஞ்சாவூரில் ஜூன் 1 முதல் 5 வரை நடைபெற உள்ள மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு 24-ம் தேதி அதிமுக, திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து வலியுறுத்தவுள்ளோம்'' என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.