‘பார்க்கிங்’ வசதி மூடல் - மதுரையில் தனியார் நிறுவனங்களுக்கு தவறான முன்னுதாரணமாகும் அரசு?
மதுரை: மதுரையில் அரசு அமைப்புகளே இருக்கிற பார்க்கிங் வசதிகளை மூடுவதும், புதிதாக கட்டும் கட்டிடங்களில் பார்க்கிங் வசதி அமைக்காமலும் தவறான முன்னுதாரணமாக திகழ்வதால், தனியார் நிறுவனங்கள் ‘பார்க்கிங்’ வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதநிலை ஏற்பட்டு நகரின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது.
மதுரையில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்கக்கூடிய வகையில் மீனாட்சி அம்மன் கோயில், தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மகால், காந்தி மியூசியம், யானை மலை, அழகர்கோவில், கீழக்குயில்குடி, திருப்பரங்குன்றம் போன்றவை உள்ளன. கோயில்கள் அதிகமுள்ள நகரம் என்பதோடு ஆண்டு முழுவதுமே திருவிழாக்கள் நடப்பதால் மதுரை திருவிழாக்கள் நகராகவும் திகழ்கிறது.
சுற்றுலாவை தவிர்த்து, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள், உள்ளூர் மக்கள் மதுரையில் உள்ள முக்கிய ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் பண்டிகை, திருமண மற்றும் சுப நிகழ்ச்சிக்காக பொருட்கள் வாங்க வருகிறார்கள். அதனால், பண்டிகை காலங்கள் மட்டுமில்லாது சாதாரண நாட்களிலும் கூட மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் நகரின் மற்ற பகுதிகளில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் திருவிழா போல் காணப்படும்.
சுற்றுலா, வணிகம், தற்போது மருத்துவம் துறையிலும் மதுரை வளர்ச்சியடையும் நிலையில் மக்கள் நகரின் அனைத்து சாலைகளிலும் எளிமையாக வந்து செல்வதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. குறிப்பாக விசாலாமான சாலைகள், வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி இல்லை. பிரமாண்ட கடைகள் முதல் சாதாரண கடைகள் வரை எந்த ஒரு கடைகளுக்கும் பார்க்கிங் வசதியில்லை. திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்களிலும் பார்க்கிங் வசதியில்லை.
மதுரையை விட சிறிய மாநகராட்சி, நகராட்சிள் மற்றும் சுற்றுலா நகரங்களில் கூட தற்போது சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் வசதிக்காக பார்க்கிங் அமைக்க முடியாத இடங்களில் மல்டி லெவல் பார்க்கிங், புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் பார்க்கிங் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்காக சிறப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஆனால், மதுரையில் மாநகராட்சி உள்ளிட்ட அரசு நிறுவனங்களே இருக்கிற பார்க்கிங் வசதிகளை மூடிவிட்டு கட்டிடங்களை கட்டி வருகின்றனர்.
உதாரணமாக அரசு ராஜாஜி மருத்துமனையில் சுத்தமாக பார்க்கிங் வசதியில்லை. சாலையில்தான் மருத்தவமனைக்கு வருவோர் வாகனங்களை நிறுத்துகிறார்கள். தற்போது கூட கோரிப்பாளையத்தில் ரூ.350 கோடிக்கு பார்க்கிங் வசதி இல்லாமல் ஒருங்கிணைந்த அடுக்குமாடி மருத்துவக்கட்டிடம் கட்டப்படுகிறது. ஒருங்கிணைந்த மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் பார்க்கிங் வசதி இல்லை. தமுக்கம் மைதானம் அருகே மாநகராட்சி ‘பார்க்கிங்’ ஆக செயல்பட்ட இடத்தில் தற்போது நூலக கட்டிடம் கட்டப்படுகிறது.
ஜான்சிராணி பூங்காவில் செயல்பட்ட பார்க்கிங் வசதி மூடப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோயில் செல்வோர் இந்த பார்க்கிங்கில் வாகனங்களை எளிதாக நிறுத்தினர். தற்போது அவர்கள் அப்பகுதி சாலையில் வாகனங்களை நிறுத்துகின்றனர். பெரியார் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘பார்க்கிங்’ செய்யும் இடம் இன்னும் திறக்கப்படவே இல்லை. புதிதாகவும் பார்க்கிங் வசதி செய்வதில்லை.
அரசு துறைகளே இப்படி இருக்கிற பார்க்கிங் வசதியை மூடுவதால் தனியார் நிறுவனங்கள் ‘பார்க்கிங்’கிற்காக ஒதுக்கிய இடங்களை தைரியமாக மற்ற பயன்பாட்டிற்கு பயன்படுத்துகின்றனர். அப்படியே இருந்தாலும் குறைவான கார்கள், இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியே உள்ளன. அதனால் சாலைகளில் எளிதாக கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீஸார்தான் தினமும் சாலைகளில் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி படாதப்பாடு படுகிறார்கள்.
மாநகராட்சி அதிகாரிகள் கட்டிட அனுமதியில் ‘பார்க்கிங்’கிற்காக ஒதுக்கிய இடங்கள், அதற்காக பயன்படுத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்வதில்லை. பார்க்கிங் இல்லாத நிறுவனங்களுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்த அறிவுறுத்துவதில்லை. அதனால், முக்கிய பண்டிகை, திருவிழா காலங்களில் சுற்றுலா வருவோர் மீண்டும் மதுரைக்கு வர தயங்குகிறார்கள். மதுரை தற்போது சுற்றுலாவை தாண்டி மருத்துவம், வர்த்தகத்திலும் மேம்பட ஆரம்பித்துள்ளநிலையில் நகரில் வாகனங்களை நிறுத்துவதற்கு முக்கிய நகரப்பகுதிகளில் கார் பார்க்கிங் ‘லிப்ட்’, மல்டி லெவர் பார்க்கிங் அமைக்கவும், புதிய அமையும் கட்டிடங்களில் கட்டாயம் பார்க்கிங் வசதியை கட்டாயப்படுத்த வேண்டும்.
மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பெரியார் பஸ்நிலையம், மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் மல்டிலெவர் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமையும் கட்டிடங்களில் பார்க்கிங் வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நகரின் பார்க்கிங் வசதியை மேம்படுத்த மாஸ்டர் பிளான் தயாராகி வருகிறது’’ என்றார்.
