

மதுரை: கருவறை முதல் கல்லறை வரை பெண்களை பாதுகாக்க சட்டம் உள்ளது. பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள் உள்ளதை பெண்கள் தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என கருத்தரங்கில் மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான வி.தீபா பேசினார்.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இன்று ஏக்தா பெண்ளுக்கான ஆதார மையம் சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான நூறு கோடி மக்களின் எழுச்சி பிரச்சார கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு, காமராசர் பல்கலைக்கழக தொடர்பியல்துறை தலைவர் எஸ்.நாகரத்தினம் தலைமை வகித்தார். ஏக்தா பெண்களுக்கான ஆதார மைய ஆலோசகர் பி.பவளம் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில், மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான வி.தீபா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: "கருவறை முதல் கல்லறை வரை பெண்களை பாதுகாக்க சட்டம் உள்ளது. இத்தகைய சட்டங்கள் உள்ளதைப்பற்றி பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வீடுகளில் ஆண் குழந்தை, பெண் குழந்தைகளிடையே பாகுபாடு காட்டாமல் சமமாக வளர்க்க வேண்டும். பெண்களை மனதளவில் காயப்படுத்துவதையும் தடுக்க சட்டம் உள்ளது. பெண்களுக்கு சட்டம் எல்லா இடங்களிலும் கை கொடுத்து வருகிறது.
தற்போது வாட்ஸ்அப்பில் பெண்களை கேலிப்பொருளாக சித்தரித்து வெளியிட்டு ‘டிரெண்டிங்’ ஆக்குகின்றனர். அதனை பெண்களே செய்வதும், அதனைப் பகிர்வதும் வேதனையளிக்கிறது. நமது சுதந்திரம் நமது கையில் உள்ளது. சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஒரு ரூபாய் செலவின்றி இலவசமாக சட்டம் சார்ந்த உதவிகள், சட்டம் சாரா உதவிகள் செய்துவருகிறோம். இதன் சேவைகளை பொதுவெளியில் தெரியப்படுத்துங்கள்" என்றார்.
இதில், எம்எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை ஆலோசகர் டாக்டர் ஜனத் வசந்தகுமாரி, தொழிலாளர் துறை உதவி ஆணையர் மைவிழிசெல்வி ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக விழிப்புணர்வாக பலூன்கள் பறக்கவிடப்பட்டன. விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.