நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக சுகாதாரத் துறை செயலர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு 

உயர் நீதிமன்ற மதுரை கிளை | கோப்புப்படம்
உயர் நீதிமன்ற மதுரை கிளை | கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் எம்.ஆர்.விநாயகமூர்த்தி. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக உள்ளார். இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு: எனது பணிமூப்பை மறுசீராய்வு செய்து, இணை பேராசிரியராக பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தேன். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், எனது பணிமூப்பை மறுசீராய்வு செய்து, 2007 முதல் இணை பேராசிரியராக பதவி உயர்வு வழங்க 23.1.2020-ல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுபடி பணிமூப்பு சீராய்வு செய்யப்பட்டது, ஆனால் இணை பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி தண்டபாணி விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சு.விஸ்வலிங்கம் வாதிட்டார்.

பின்னர் நீதிபதி, தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் பிப்.24-ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். அதற்குள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றினால் அவர் ஆஜராக விலக்கு கோரலாம் என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in