Published : 14 Feb 2023 07:15 PM
Last Updated : 14 Feb 2023 07:15 PM

தமிழகத்தின் மின் வாகன நகரங்களாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் நெல்லை அறிவிப்பு - இலக்கு 10 ஆண்டுகள்

மின்சார இருசக்கர வாகனம் | கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களை மின் வாகன நகரங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு முதல் கட்டமாக சென்னையில் மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து மின்சார இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் 6 நகரங்களை மின் வாகன நகரங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்கள் மின் வாகன நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் உள்ள பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களை அடுத்த 10 ஆண்டுகளில் முழுவதுமாக மின்சார வாகனங்களாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் விவரம்:

ஸ்மார்ட் மொபிலிட்டி திட்டம்: இந்தத் திட்டத்தில் 6 நகரங்களின் ஆணையர்கள் நோடல் அதிகாரியாக நியமிக்கப்படுவார்கள். இவர்களின் தலைமையில் ஸ்மார்ட் மொபிலிட்டி திட்டம் தயார் செய்யப்படும். இதன்படி அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நகரங்களில் உள்ள அரசு பேருந்துகள் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மின்சார வாகனங்களாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் பொதுமக்கள் தனியார் பங்களிப்பு முறையில் அரசு சார்பில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.

மின்சார பேருந்துகள்: அரசு பேருந்துகளை படிப்படியாக மின்சார வாகனங்களாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி 2030-ம் ஆண்டுக்குள் மொத்தம் உள்ள அரசு பேருந்துகளில் 30 சதவீத பேருந்துகள் மின்சார வாகனங்களாக இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இரு சக்கர வாகனங்கள்: தமிழகத்தில் மின்சார இரு சக்கர வாகனங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் அதிகபட்சமாக ஏத்தர் நிறுவனத்தின் 1423 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. மேலும் கடந்த ஜனவரி மாதம் வரை இந்த நிறுவனம் 7500 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் பதிவாகி உள்ள வாகனங்களில் 78 சதவீதவ வாகனங்கள் இரு சக்கர வாகனங்கள் ஆகும். எனவே, பல்வேறு சலுகைகள் அளித்து மின்சார இரு சக்கர வாகன விற்பனை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x