காரைக்காலில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநிலத் தலைவர் வி.சாமிநாதன், புதுச்சேரி அமைச்சர்கள் உள்ளிட்டோர்
காரைக்காலில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநிலத் தலைவர் வி.சாமிநாதன், புதுச்சேரி அமைச்சர்கள் உள்ளிட்டோர்

புதுச்சேரி அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக மறுப்பு

Published on

காரைக்கால்: புதுச்சேரி அமைச்சர்கள் மீதான முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமியின் ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜக மறுப்பதாக அக்கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் வி.சாமிநாதன் கூறியுள்ளார்.

பாஜகவின் காரைக்கால் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று காரைக்காலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வி.சாமிநாதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரி அமைச்சர்களின் ஊழல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிடும் என முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜக மறுக்கிறது, வனமையாகக் கண்டிக்கிறது.

புதுச்சேரியில் ஊழல் இல்லாத வளர்ச்சியை நோக்கிய வெளிப்படையான நிர்வாகம் நடந்து வருகிறது. ஊழலின் பிறப்பிடமாக உள்ள காங்கிரஸ் கட்சி ஊழலைப் பற்றிப் பேச தகுதியில்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பொது மேடையில் விவாதிக்க பாஜக தயாராக உ்ள்ளது.

புதுச்சேரி மாநிலம் ரூ.10 ஆயிரம் கோடி கடனில் உள்ளது. இதற்கு காங்கிரஸ்தான் காரணம். அரசு தொழில் நிறுவனங்கள் பல காங்கிரஸ் ஆட்சியில் மூடப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்கும், மாநிலத்துக்கும் துரோகம் செய்தவர் நாராயணசாமி. பயம் காரணமாகவே கடந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. வரும் தேர்தலில் அவர் போட்டியிட்டு அவர் தனது வலிமையை காட்ட வேண்டும்.

2024 தேர்தலை வெற்றிகரமாக சந்திக்கும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளது. புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து தொடர்பாக மக்களின் விருப்பத்தை அறிந்து அதனடிப்படையில் கட்சியின் நிலைப்பாடு குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும்.

பிரதமரை எந்தவொரு தொழிலதிபரும் சந்திப்பது என்பது இயல்பானது. இது தொடர்பாக பிரதமர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு கேவலமானது. அதானியின் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தைரியமிருந்தால் குற்றச்சாட்டுகள் குறித்து நிரூபிக்கட்டும். இது தொடர்பாக நாடாளுமன்றத்தையே முடக்கப்போவதாக சொன்ன காங்கிரஸ் பின்னர் அது குறித்து விவாதிக்காமல் இருந்தது ஏன்? கூட்டுக்குழுவை கூட்டச் சொல்லாது ஏன்?

புதுச்சேரி துணை நிலை ஆளுநர்தான் பாஜக தலைவர் போல செயல்படுவதாக, முன்னாள் முதல்வர் நாராயண்சாமி கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, 12 எம்.எல்.ஏக்கள் எங்களிடம் உள்ளனர். ஆளுநரை வைத்து அரசியல் செய்யவோ, கட்சியை வளர்க்கவோ வேண்டிய அவசியமோ பாஜகவுக்கு இல்லை. புதுச்சேரி முதல்வர் டம்மி முதல்வரோ, யாருக்கும் அடிமையாகவோ இல்லை. அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்" என்றார்.

புதுச்சேரி அமைச்சர்கள் ஏ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார், பாஜக மாநில துணைத் தலைவர்கள் எம்.அருள்முருகன், வி.கே.கணபதி, மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in