யாருடைய உத்தரவின் பேரில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு? - சீமான் கேள்வி

சீமான் | கோப்புப்படம்
சீமான் | கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: "தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு முடிவுகளை வேண்டுமென்றே காலதாமதம் செய்வதற்கான காரணம் என்ன? யாருடைய உத்தரவின் பேரில் தேர்வு முடிவுகள் வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) 2022-ஆம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்ட Group-4 தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தமிழ்நாடு அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு அரசு அலுவலங்களில் காலியாகவுள்ள 7301 பணியிடங்களை நிரப்புவதற்கான Group-4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது. ஏறத்தாழ 18 லட்சம் தேர்வர்கள் எழுதிய அத்தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிடாமல் தொடர்ந்து இழுத்தடித்து வருவதால் தேர்வர்கள் பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு முடிவுகளை அக்டோபர் மாதம் வெளியிடுவதாக முதலில் அறிவித்திருந்த நிலையில், பெண்கள் இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக தேர்வு முடிவுகளை தள்ளிப்போட்டது. பின்னர் டிசம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகுமென தேர்வாணையம் இரண்டாவது முறையாக அறிவித்திருந்த நிலையில் அப்போதும் வெளியாகவில்லை.

தற்போது மூன்றாவது முறையாக 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடுவதாகக் குறிப்பிடப்பட்ட நிலையில் இன்றுவரை தேர்வு முடிவுகள் வெளியிடபடவில்லை என்பதோடு தேர்வுமுடிவுகள் வெளியாகாததற்கான காரணத்தையும் தேர்வாணையம் கூறவில்லை என்பது அதன் எதேச்சதிகாரப் போக்கினையே காட்டுகிறது.

தேர்வாணையம் தேர்வு முடிவுகளை வேண்டுமென்றே காலதாமதம் செய்வதற்கான காரணம் என்ன? யாருடைய உத்தரவின் பேரில் தேர்வு முடிவுகள் வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது? தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் செய்வதற்காக இத்தகைய காலதாமதம் செயற்கையாக செய்யப்படுகிறதா? தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்துள்ளனர் என்பது திமுக அரசிற்கு தெரியாதா? அவர்களின் எதிர்காலத்தோடு அரசு விளையாடுவது எவ்வகையில் நியாயமாகும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது?

இரவு பகல் பாராமல் கடின உழைப்பினைச் செலுத்திப் படித்து எழுதிய தேர்வின் முடிவுகள் தெரியாமலும், வேறு வேலைக்குச் செல்ல முடியாமலும் ஏழை எளிய கிராமப்புற இளைஞர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். ஏற்கெனவே கரோனா பெருந்தோற்று முடக்கத்தால் 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் எவ்வித அரசுத் தேர்வுகளும் நடைபெறாததால் தமிழ்நாட்டு இளைஞர்கள் பலர் வயது மூப்பு ஏற்பட்டு தேர்வு எழுதும் தகுதியை இழந்தனர். தற்போது மீண்டும் தேர்வு எழுதி 7 மாதங்களாக முடிவுகள் அறிவிக்கப்படாமல் அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துவது அவர்களின் வாழ்வினை இருளில் தள்ளுகின்றச் செயலாகும்.

ஆகவே, அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி முடிந்த Group-4 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in