

அரசு அதிகாரியை மிரட்டி லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் சரோஜாவை கைது செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அமைச்சர் சரோஜா, அரசு பெண் அதிகாரியை மிரட்டி ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இந்த ஆட்சியில் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. அமைச்சரால் மிரட்டப்பட்ட பெண் அதிகாரிக்கும் அவரது குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதிகாரியை மிரட்டிய அமைச்சர் சரோஜா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்.
‘நீட்’ தேர்வில் பல்வேறு வரம்புகள் மீறப்பட்டு உள்ளன. சோதனை என்ற பெயரில் மாணவிகளிடம் அத்துமீறி நடந்துள்ளனர். இதனால், தேர்வு எழுதிய மாணவிகளின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் மாயாவதி போன்ற தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி உள்ளனர். டெல்லியில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் கேஜ்ரிவால் கூறி உள்ளார். ஆகவே பழைய ஓட்டுச் சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்றார்.