

அரசு ஒதுக்கீட்டு இடங்களில் தேர்வான மாணவர்களை இன்றுக்குள் சேர்க்காவிட்டால் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தடையில்லா சான்று ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
தனியார் கல்லூரிக்கு ஆதரவாக காங்கிரஸ் அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி அதிமுகவும், சிபிஐ விசாரணை கோரி என்.ஆர்.காங்கிரஸும் வெளிநடப்பு செய்தன.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பூஜ்யநேரத்தில் மருத்துவக்கல்லூரி முதுநிலை படிப்புக்கான கலந்தாய்வுவிவகாரம் தொடர்பாக விவாதம் நடந்தது.
அன்பழகன் (அதிமுக): புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சென்டாக்கில் ஆய்வு செய்து அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளனர். 7 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 159 இடங்கள் அரசுக்கு ஒதுக்கப்பட்டன. உரிய கட்டணத்தை தேர்வு செய்யாதது, அரசு முறையான கட்டணத்தை காலத்தோடு அறிவிக்காதது இப்பிரச்சினைக்கு முக்கியக் காரணம். இதுதொடர்பாக பலமுறை சட்டப்பேரவையில் பேசினோம். தனியார் கல்லூரிகளின் தடையில்லா சான்று ரத்து செய்வதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அவர் நியாயமான கேள்வி எழுப்பினார். ஒரு மாணவரை கூட தனியார் கல்லூரிகள் சேர்க்கவில்லை. நிகர்நிலைப் பல்கலைக்கழக கட்டணம் நிர்ணயிக்கவில்லை. யூஜிசியிடம் பேசி தற்போது நிர்ணயித்துள்ள கட்டணம் பொருந்தும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அரசு தரப்பில் மாற்று கருத்து தெரிவிக்கிறீர்கள். இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். சட்டப்பேரவையில் இதுதொடர்பாக பேசினால், முதல்வர் இது எங்கள் வேலையல்ல என்று தெரிவித்தார். அவரது அறிவிப்புக்கு பிறகு ஆளுநர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
அரசு எதற்கு, அமைச்சர் எதற்கு என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பொறுபேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடியை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்.
சிவா (திமுக): மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. மருத்துவ முதுநிலைப்படிப்பில் 71 மாணவர்கள் நிர்வாக கோட்டாவுக்கு மாற்றியது ஏன் என்ற கேள்வி எழுகிறது. புதுச்சேரியில் இது முக்கிய பிரச்சினை. ஜனநாயக அமைப்பே சந்தேகத்துக்கு இடமான சூழல் நிலவுகிறது. தவறாக மருத்துவ கலந்தாய்வு நடப்பதாக கூறி மாணவர்களை அழைத்துக் கொண்டு ஆளுநர் சென்றுள்ளார். மாணவர்களை சேர்க்கும் உத்தரவுக்கு கீழ்படியாத மருத்துவக்கல்லூரிகளின் என்ஓசி ரத்து செய்வதாக முதலில் தெரிவித்தார்கள். இதில் முதல்வர் நிலை என்ன?
அசோக் ஆனந்த் (என்.ஆர்.காங்கிரஸ்): சென்டாக்கில் அசாத்திய சூழல் உள்ளது. யூஜிசியைப் பொறுத்தவரை கடிதம் அனுப்பியுள்ளனர். அடுத்து எம்பிபிஎஸ் சேர்க்கை உள்ளது. அதிலும் முடிவு எடுக்க வேண்டும். மாணவர் பிரச்சினையில் அரசியல் செய்யக் கூடாது. நம்மால் முடியாவிட்டால் ஆளுநராவது செய்ய ஒத்துழைக்க வேண்டும்.
முதல்வர் நாராயணசாமி: நீங்கள் ஆளுநர் ஏஜென்ட்டா? ஆளுநருக்கு ஆதரவாக பேசுகிறீர்கள். தவறு செய்தால் சொல்லுங்கள்.
அசோக் ஆனந்த் (என்.ஆர்.காங்கிரஸ்): தவறாக சொல்லவில்லை. முதல்வர், ஆளுநர் கலந்து ஆலோசித்து செய்யுங்கள்
அன்பழகன் (அதிமுக): இதை ஆளுநரிடம் சொல்லுங்கள். பலகீனமாக முதல்வர் இருக்கக் கூடாது. தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகிகளை அழைத்து பேசியபோது அவர்கள் அரசை மதிக்கவில்லை. உடனடியாக தடையில்லா சான்றை ரத்து செய்திருக்க வேண்டும்.
பாலன் (காங்கிரஸ்): ஏன் எங்களை பேச அனுமதிக்காமல் ஒதுக்குகிறீர்கள். நான் வெளிநடப்பு செய்ய வேண்டும். தடையில்லா சான்றை ரத்து செய்யுங்கள்.
முதல்வர் நாராயணசாமி: மருத்துவக்கல்லூரி மேல்படிப்புக்காக மாணவ, மாணவிகள் புதுச்சேரியில் சேர்ப்பது தொடர்பாக ஒரு அறிவிக்கையை மத்திய அரசு அளித்தது. கடந்த ஜனவரி 13-ம் தேதி வந்தது. அதைத்தொடர்ந்து மார்ச் 10-ல் மற்றொரு அறிவிக்கையை மத்திய அரசு அளித்தது. அதை பின்பற்றியே கலந்தாய்வு நடந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
காலியாக உள்ள மீதியுள்ள இடங்களை நிரப்புவது பற்றி மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும். பல மாணவ, மாணவிகள் வெளி மாநிலங்களில் மேல்படிப்பு படிக்க சென்று விட்டனர். நாங்கள் வெளிப்படையாக கலந்தாய்வு செய்துள்ளோம். மத்திய அரசு அறிவிக்கைப்படி நடவடிக்கை எடுத்துள்ளோம். அதை மீற எங்களுக்கு அதிகாரம் இல்லை.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசினோம். மருத்துவ மேல்நிலைப்படிப்பில் காலியாக இடங்கள் இருக்கிறதை தெரிவித்துள்ளோம். மத்திய அரசு முடிவுக்கு கட்டுப்படுவோம். அரசு ஒதுக்கீட்டு இடங்களில் தேர்வாகி கட்டணம் செலுத்துவதை தனியார் கல்லூரிகள் ஏற்காவிட்டால் அக்கல்லூரிகளில் தடையில்லா சான்று ரத்து செய்யும் கடிதத்தை அனுப்புவோம். மாணவர்களை சேர்க்காவிட்டால் என்ஓசி ரத்து செய்யப்படும்.
அன்பழகன் (அதிமுக): மருத்துவ கட்டணத்தை முதலில் அறிவிக்காதது முக்கியக் காரணம். அரசுக்கு பொறுப்பில்லை. இவ்விஷயத்தில் முனைப்பும் காட்டவில்லை. கட்டணத்தை காலத்தோடு அறிவிக்கவில்லை. தேர்வான 88 பேரில் ஒருவர் கூட கல்லூரியில் சேரவில்லை. தனியார் மருத்துவக்கல்லூரிக்கு ஆதரவாகவே அரசு செயல்படுவதால் வெளிநடப்பு செய்கிறோம்.
ஜெயபால், அசோக் ஆனந்த் (என்.ஆர்.காங்கிரஸ்): அரசு தவறு நடந்துள்ளதாக வாட்ஸ் அப்பில் ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை. உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றனர்.