அறிவிப்போடு நின்ற ஆட்டோ கட்டணம்: கூடுதல் கட்டணம் வசூல் - மக்கள் அவதி

அறிவிப்போடு நின்ற ஆட்டோ கட்டணம்: கூடுதல் கட்டணம் வசூல் - மக்கள் அவதி
Updated on
2 min read

புதுச்சேரியில் ஆட்டோகளுக்கு புதிய கட்டணம் அரசு நிர்ணயம் செய்தும், நிர்ணயித்த கட்டணத்தை வாங்காமல் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

புதுச்சேரியில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் அரசு நிர்ணயம் செய்து கடந்தாண்டு அரசாணை வெளியிட்டது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் இயங்கும் ஆட்டோக்களுக்கு பகல் நேர சேவையாக காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 1.8 கி.மீட்டருக்கு 35 ரூபாயும், கூடுதல் ஒவ்வொரு கி.மீட்டருக்கும் 18 ரூபாயும், காத்திருப்பு கட்டணம் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் 5 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

இரவு நேர சேவையாக இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை பகல் நேர சேவைக் கட்டணத்துடன் 50 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் நிரணயம் செய்யப்பட்டது.

உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு பயன்படும் வகையில் முன் கட்டண ஆட்டோ சேவை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் முன் கட்டண ஆட்டோ சவை மையங்கள் தொடங்கவும், முன் கட்டண ஆட்டோ சேவைக்கு 20 சதவீதம் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த விலைப் பட்டியலை ஒவ்வொரு ஆட்டோவிலும் பொதுமக்கள் பார்வையில் தெரியும்படி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த விலை நிர்ணயம் கடந்த 2016 டிசம்பர் 15-ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்தது.

கூடுதல் கட்டணம் வசூலிப்பு

ஆனால், பேருந்து நிலையம், ரயில் நிலையம், நகரின் முக்கிய இடங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வாங்குவதில்லை. மாறாக கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றனர்.

குறிப்பாக, முத்தியால்பேட்டையில் இருந்து ரயில் நிலையத்துக்கு ரூ. 150-க்கும் மேல் கட்டணம் வசூலிக்கின்றனர். புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்துக்கு ரூ.150 பெறுகின்றனர். இந்திராகாந்தி சிலையில் இருந்து மூலகுளம் செல்ல ரூ.200 வரை வசூலிக்கின்றனர் இதனால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 20, 30 ரூபாய் வரை கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது.

பலர் மீட்டர் பொருத்தாமலேயே ஆட்டோக்களை இயக்குகின்றனர். மீட்டர் பொருத்தியிருந்தாலும், மீட்டர் போட்டு ஆட்டோவை ஓட்டுவதில்லை.

அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதில்லை

இதுபற்றி சில ஆட்டோ தொழிற்சங்கத்தினரிடம் கேட்டதற்கு, ''புதுச்சேரியில் பெரும்பாலான ஆட்டோக்களில் பழைய மாடல் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. சில ஆட்டோக்களில்தான் எலக்ட்ரானிக் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆட்டோ மீட்டர்களை புதிய கட்டணத்திற்கேற்ப திருத்தி அமைக்க முகாம்கள் நடத்த வேண்டும்.

குறைந்த விலையில் மீட்டர்கள் வழங்க வேண்டும். இதுபற்றி பலமுறை போக்குவரத்துத் துறைக்கு கோரிக்கை வைத்தோம். எதுவும் செய்யவில்லை. ஆட்டோ கட்டணத்தை உடனடியாக அறிவித்து அமலுக்கு கொண்டு வந்தனர். இதுபற்றி பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. இதனால், சிலர் கூடுதலாக கேட்கும் பணத்தை அவர்கள் கொடுத்துவிட்டு செல்கின்றனர்.

எல்லா ஆட்டோ ஓட்டுநர்களும் கூடுதலாக பணம் வசூலிப்பது இல்லை. அரசு நிர்ணயித்த கட்டணத்தை சில சங்கங்கள் ஏற்றுக்கொண்டால், சில சங்கங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. முரண்பாடு நிலவுகிறது.

போக்குவரத்து துறை அதிகாரிகள் கட்டணத்தை அறிவிப்பதோடு மட்டும் நின்று விடுகின்றனர். போதிய ஆய்வோ, கண்காணிப்பதோ கிடையாது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் நியாயமாக கட்டணம் பெற்றாலும் கெட்ட பெயர்தான் வருகிறது. ஜிபிஆர்எஸ் ஆட்டோ மீட்டர் வழங்குவதாக கூறினர். ஆனால் வழங்கவில்லை. அதிகாரிகள் மெத்தனத்தினால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கின்றனர்.

ஒரு புகார் கூட வரவில்லை

கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து போக்குவரத்து துறை ஆணையர் சுந்தரேசனிடம் கேட்டதற்கு, ''நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக யாரேனும் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கலாம். எங்களுக்கு இதுவரை ஒரு புகார் கூட வரவில்லை. அவ்வாறு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in