

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சுகாதாரத்துறை மூலம் கட்டப்பட்டுள்ள ரூ.13 கோடியே 40 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடி மதிப்பில் 20 படுக்கைகள் கொண்ட ஆண், பெண் பிரிவு, 10 படுக்கைகள் கொண்ட அறுவை சிகிச்சைக்கு பிந்தைய ஆண் மற்றும் பெண் கவனிப்பு பிரிவு, 10 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் பிரிவு ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இவற்றை காணொலி காட்சி மூலம் முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும், திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் மகப்பேறு புறநோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கவனிப்பு பிரிவு, கதிர்வீச்சு பிரிவு, மற்றும் தர்மபுரியில் புறநோயாளிகள் பிரிவு, ரத்த வங்கி மற்றும் வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், நெல்லை, விருதுநகர், தஞ்சை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார். திறக்கப்பட்ட கட்டிடங்களின் மதிப்பு ரூ.13 கோடியே 40 லட்சமாகும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.