

கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழகம் கோரி வரும் நிலையில், இந்திய - இலங்கை கடல் எல்லையில் ஒளிரும் மிதவை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பது சரியானதல்ல என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பாக் நீரிணை பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்குதலுக் குள்ளாகி, சித்ரவதை செய்யப்படுவது தொடர்பாக தங்களுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். நீண்டகாலமாக உள்ள இந்தப் பிரச்சினையை தீர்க்க சில பரிந்துரைகளை கடந்த ஜூன் 3 ம் தேதி தங்களைச் சந்தித்தபோது கொடுத்த மனுவில் குறிப்பிட்டிருந்தேன்.
இப்பிரச்சினையை மத்திய அரசு அணுகிய விதத்தை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். தங்களது அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, இலங்கை சிறையில் இருந்த மீனவர்களை விடுவித்தனர். இந்நிலையில், இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக கடந்த மாதம் 17 ம் தேதி வெளியுறவுதுறை அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதை அறிந்தேன். இப்பிரச்சினையை மத்திய அரசு உயர்மட்ட அளவில் ஆலோசிப்பதை வரவேற்கிறேன்.
அதேநேரத்தில், அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் பற்றி மாநில அரசுக்கு மத்திய மீன்வளத்துறை அனுப்பிய கடிதம் கவலை அளிப்பதாக உள்ளது.
இந்தியா - இலங்கை இடையே சர்வதேச கடல் எல்லையில் ஒளிரும் மிதவைகளை அமைப்பது பற்றி அந்தக் கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக நான் அளித்த மனுவிலும், எழுதியுள்ள கடிதங்களிலும் குறிப்பிட்டுள்ளேன். இலங்கையுடன் 1974 மற்றும் 1976 ம் ஆண்டுகளில் செய்யப்பட்ட சட்டவிரோத ஒப்பந்தம் மூலம் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கோரியிருந் தேன்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மிதவை அமைப்பது பற்றி விவாதிக்க இது உகந்த நேரம் அல்ல. அது சரியான முடிவாகவும் இருக்காது.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நாங்கள் 50 சதவீத மானிய உதவியுடன் பெரிய மீன்பிடி படகுகளை வாங்க உதவுவது உள்பட சில திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். ஜூன் 3 ம் தேதி தங்களிடம் அளித்த மனுவில் மீனவர்களுக்கு ரூ.1,520 கோடியில் விரிவான சிறப்பு தொகுப்பு திட்டங்களை அமல்படுத்த கோரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு உதவும் வகையில் மூன்றாண்டு காலத்தில் பெரிய படகுகள் வாங்க ரூ.975 கோடி கொடுக்க வேண்டும். நடுக்கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு உதவும் வகையில் ஒரு பெரிய கப்பலில் மீன் பதப்படுத்தும் பூங்காவை ரூ.80 கோடி செலவில் ஏற்படுத்த வேண்டும்.
ராமேஸ்வரம், மூக்கையூர், எண்ணூர் ஆகிய மீன்பிடி துறைமுகங் களில் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு ஏதுவாக உள்கட்டமைப்பு வசதிகளை ரூ.420 கோடி செலவில் உருவாக்க வேண்டும். ஆண்டுதோறும் துறைமுக பராமரிப்பு பணிகளுக்கு ரூ.10 கோடி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தேன்.
பாக் நீரிணையும், மன்னார் வளைகுடாவும் மீன் பிடிப்பதற்கான சிறப்பு சூழலியல் மண்டலங்களாகும். இதில் மன்னார் வளைகுடா பகுதி, இந்தியாவின் முதல் பாதுகாக்கப்பட்ட கடல் உயிர்க்கோளப் பகுதியாகும். பாக் நீரிணை கடல் பகுதி மிகவும் ஆழமற்றது. எனவே அந்த இரு இடங்களும் மீன்பிடித் தொழிலுக்கு ஏற்றதாக இல்லை. மேலும், விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக கடலோர மீனவர்களால் பண்ணை குட்டைகளையும் அமைக்க முடிவதில்லை.
எனவே, தமிழக அரசின் நியாயமான கவலைகளை மத்திய அரசின் அமைச்சகங்கள் கருத்தில் கொண்டு, நீண்டகால தீர்வு ஏற்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.