

கோவை: கோவை மத்திய சிறை வளாகத்தில், முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பில், ரூ.170 கோடி மதிப்பில் செம் மொழிப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கரில் அமைந்துள்ள கோவை மத்திய சிறை, கடந்த 1872-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். சிறை வளாகத்தில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே சிறை உள்ளது. ஆண்கள் சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பெண்கள் சிறையில் 50-க்கும் மேற்பட்டோரும் அடைக்கப்பட்டுள் ளனர்.
கோவை சரக சிறைத்துறை டிஐஜி மேற்பார்வையில், மத்திய சிறைக் கண்காணிப்பாளர் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட காவலர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். 120 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் சிறை கட்டிடங்கள், தொழிற்கூடங்கள், குடோன்கள் ஆகியவை உள்ளன. இதற்கிடையில், கோவை மத்திய சிறையை இடம் மாற்றிவிட்டு, அங்கு செம்மொழிப்பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2010-ம் ஆண்டு திமுக அரசால் அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக, சிறை வளாகத்தில் உள்ள 45 ஏக்கர் நிலம் அப்போதே செம்மொழிப் பூங்காவுக்காக மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அத்திட்டம் கிடப்பில் போடப் பட்டது. தற்போது மீண்டும் திமுக அரசு அமைந்ததைத் தொடர்ந்து சிறை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா ஏற்படுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மத்தியசிறையை காரமடை அருகே இடமாற்றம் செய்ய ஆலோசனைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அதேநேரம், தற்போது சிறை வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள 45 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் முதல்கட்டமாக செம்மொழிப்பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கு என்னென்ன கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என ஆய்வு செய்யப்பட்டு, பல்வேறு துறை வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நகராட்சி நிர்வாக இயக்குநரகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும்போது,‘‘சிறை வளாகத்தில் ரூ.170 கோடி மதிப்பில் செம்மொழிப்பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இது தொடர்பான திட்ட அறிக்கைக்கு எந்த நேரத்திலும் ஒப்புதல் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. செம் மொழிப் பூங்கா வளாகத்தில் பல்வகை பூங்காக்கள், பெரிய கட்டமைப்பு வளாகம், பொது மக்களுக்கான பொழுது போக்கு கட்டமைப்புகள், கூட்ட அரங்கு, கடைகள், பல அடுக்கு வாகன நிறுத்தகம், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன. அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்தவுடன், திட்டப் பணிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.