Published : 14 Feb 2023 06:17 AM
Last Updated : 14 Feb 2023 06:17 AM

கூவம் கரையில் 43 வகையான மரக்கன்றுகளை நடும் பணி: மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை ஆறுகள் சீரமைப்புஅறக்கட்டளை நிதியின் கீழ் அடையாறு, கூவம் ஆகிய ஆறுகளின் கரைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை சமன்படுத்துதல், திடக்கழிவுகளை அகற்றுதல், மரக்கன்றுகளை நடுதல் மற்றும் தடுப்பு வேலிகளை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அடையாறு ஆற்றங்கரையில் திரு.வி.க. நகர் பாலம் முதல் MRTS பாலம் வரை ரூ.5.4 கோடியில் நடைபாதை அமைத்தல், 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல் போன்றபணிகள் நடைபெற்றன. முடிவுற்ற இப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாகக் கடந்த நவம்பரில் திறந்து வைத்தார்.

மேலும், ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட அடையாறு ஆற்றங்கரையில் மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுதளம் அருகே உள்ள மேம்பாலம் முதல் நந்தம்பாக்கம் பாலம் வரை இடதுபுறத்தில் 3.9 கிமீநீளத்தில் 16 ஆயிரத்து 955 சதுர அடிபரப்பளவு இடத்தில் ரூ.1.41 கோடியிலும், வலதுபுறத்தில் 4 கிமீ நீளத்தில் 13 ஆயிரத்து 312 சதுர அடி பரப்பில் ரூ.1.17 கோடியிலும் 13 ஆயிரத்து 456 மரக்கன்றுகளை நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, நேப்பியர் பாலம் முதல் லாஸ் பாலம் வரை கூவம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளைச் சமன்படுத்தி, சுற்றுச்சுவர் அமைத்து மேம்படுத்தி, பாரம்பரிய மரக்கன்றுகளான அரச மரம், ஆலமரம், மகிழம், மலைவேம்பு, அசோக மரம், பூவரசு, புங்கன், கல்யாண முருங்கை, மருத மரம், புன்னை, வேம்பு, இலுப்பை, கொய்யா, நொச்சி உள்ளிட்ட 43 வகையான மரக்கன்றுகளை நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் ரூ.3.51 கோடியில் 4.22 கிமீநீளத்துக்கு 29 ஆயிரத்து 300 மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மீதம் உள்ள மரக்கன்றுகள் மார்ச் மாத இறுதிக்குள் நடவு செய்யப்பட உள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x