

திண்டுக்கல்: தன்னை கருணைக் கொலை செய்யக் கோரி மாற்றுத் திறனாளி ஒருவர் பதாகையை ஏந்தி திண்டுக்கல் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே மணியக் காரன்பட்டியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி குமரவேல். இவரது தாயார் வீரம்மாள். இருவரும் கடந்த 15 ஆண்டுகளாக மணியக்காரன்பட்டியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து குடியிருந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடிசையை அதிகாரிகள் அகற்றினர்.
இதனால் வேதனை அடைந்த குமரவேல், ‘என்னை கருணைக் கொலை செய்திடுங்கள்’ என எழுதப்பட்ட பதாகையை கையில் ஏந்திய படி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மனு அளிக்க வந்தார். அவரிடம் விசாரித்த போலீஸார், ஆட்சியரிடம் அழைத்துச் சென்று கோரிக்கை மனுவை அளிக்கச் செய்தனர்.