Published : 14 Feb 2023 04:20 AM
Last Updated : 14 Feb 2023 04:20 AM

நாகை அருகே உயிரிழந்த தாயாரின் கண்களை தானம் செய்த பார்வை மாற்றுத்திறன் இளைஞர்

நாகை அருகே மேலக்குறிச்சியில் உயிரிழந்த தன் தாயாரின் கண்களை தானம் செய்த பார்வை மாற்றுத்திறனாளியான அசோக்குமாரிடம், கண் தானம் செய்ததற்காக மருத்துவமனை அளித்த சான்றிதழை நேற்று வழங்குகிறார் லயன்ஸ் கிளப் ஆப் நாகப்பட்டினம் போர்ட் டவுன் தலைவர் சண்முகம்.

நாகப்பட்டினம்: நாகை அருகே பார்வை மாற்றுத்திறனுடைய இளைஞர் ஒருவர், உடல்நலக் குறைவால் உயிரிழந்த தன் தாயாரின் கண்களை தானம் செய்தார்.

நாகை வட்டம் மேலக் குறிச்சி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி அஞ்சலை அம்மாள் (65). இவர்களது மகன் அசோக்குமார் (35) பார்வை மாற்றுத் திறனாளியாவார். அஞ்சலை அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன் தினம் உயிரிழந்தார்.

இதையடுத்து, பார்வை மாற்றுத் திறனாளியான அசோக்குமார், தன் தாயாரின் கண்களை தானம் செய்ய முடிவெடுத்தார். இதற்கு, அவரது தந்தை பழனிவேலும் சம்மதித்ததால், அன்று இரவு லயன்ஸ் கிளப் ஆப் நாகப்பட்டினம் போர்ட் டவுன் தலைவர் சண்முகத்தை தொடர்புகொண்ட அசோக்குமார், தன் தாயாரின் கண்களை தானம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.

அப்போது, தனக்கு ஒரு வயது இருக்கும்போது காய்ச்சல் ஏற்பட்டு, பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டதால், தான் முற்றிலும் பார்வை இழந்து விட்டதாகவும், தன் தாயாரின் கண்களை தானம் செய்வதால் தன்னைப் போன்று பார்வையின்றி பாதிக்கப்படும் ஒருவருக்கு பார்வை கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் கும்பகோணம் மையத்தை சண்முகம் தொடர்புகொண்டு பேசினார். அதன்பேரில், அன்று நள்ளிரவு 1 மணியளவில் அம்மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் மேலக்குறிச்சி கிராமத்துக்கு வந்து, அஞ்சலை அம்மாளின் கண்களை தானம் பெற்றுச் சென்றனர். இதையறிந்த கிராம மக்கள் அசோக்குமாரை வெகுவாக பாராட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x