

தமிழகத்தில் தரம் குறைந்த நகைகளை விற்கும் நகைக் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நகைக் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தக் கோரியும் தாக்கல் செய்த மனுவுக்கு உள்துறைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த அழகுஜோதி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நகைக் கடைகளில் நகைகள் 22 கேரட் சுத்தமான அளவுடன், 916 கேடிஎம் முத்திரையிட்ட ஹால் மார்க் சின்னம் பொறித்த நகைகளைத்தான் விற்க வேண்டும். ஆனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான நகைக் கடைகளில் தரம் குறைந்த நகைகளை விற் கின்றனர். கல்வியறிவு இல்லாத வர்கள் நகையின் தரம் பற்றி தெரியாமல் தரம் குறைந்த நகை களை வாங்கிச் செல்கின்றனர்.
தரமற்ற நகைகளை வாங்கு வோர் அதை வங்கியில் அடமானம் வைக்கும்போதும், மறு விற்பனையின்போதும் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள நகைக் கடைகளில் தரம் குறைந்த தங்கம், வெள்ளி நகைகள் விற்பனையைத் தடுக்க வணிகவரித் துறை, இந்திய தரச் சான்றிதழ் வழங்கும் அமைப்பு திடீர் ஆய்வு மேற்கொள்ளவும், ஹால் மார்க் முத்திரை இல்லாத தரம் குறைந்த நகைகளை விற்கும் கடையின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக உள்துறைச் செயலர், வணிகவரித் துறை ஆணையர், இந்திய தரச் சான்றிதழ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 18-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.