Published : 20 May 2017 08:01 AM
Last Updated : 20 May 2017 08:01 AM

செவ்வாய் கிரகத்தில் மழை பெய்த ஆதாரத்தை கண்டறிந்த ‘மங்கள்யான்’: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

செவ்வாய் கிரகத்தில் ஒருகாலத் தில் மழை பெய்துள்ளது என்பதை மங்கள்யான் விண்கலம்தான் முதலில் கண்டறிந்து கூறியது என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில் சாமி அண்ணாதுரை கூறினார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட் டாவில் இருந்து 2013 நவம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம், 2014 செப்டம்பரில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது. அதுமுதல், செவ்வாய் கிரகத்தை சுற்றியபடியே மங்கள் யான் ஆராய்ந்து வருகிறது.

‘மங்கள்யானின் ஆயுள்காலம் 6 மாதங்கள் மட்டுமே. எனவே, 6 மாதகாலம் வரை மட்டுமே அது செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்யும்’ என்று முதலில் தெரி விக்கப்பட்டது. ஆனால், சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகியும் மங்கள்யான் தொடர்ந்து வெற்றி கரமாக இயங்கி வருகிறது.

இதுகுறித்து சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:

‘இன்சாட்-17’ செயற்கைக் கோள் வரும் 25 அல்லது 26-ம் தேதி பிரெஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் ஏவப்படும். ‘இன்சாட்-19’ செயற்கைக்கோள் அடுத்த மாதம் செலுத்தப்பட உள்ளது. ‘சந்திரயான் 2’ விண் கலம் தயாரிப்பு பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடியும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அது நிலவுக்கு அனுப்பப்படும்.

மங்கள்யானில் இன்னும் எரிபொருள் இருக்கிறது. அது நல்ல நிலையில் செயல்பட்டு வரு கிறது. தற்போதைய நிலை நீடித் தால் இன்னும் ஓராண்டுக்கு மேல் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை மங்கள்யான் ஆய்வு செய்யும்.

நிலவில் தண்ணீர் இருப்பதற் கான ஆதாரத்தை சந்திரயான் 1 விண்கலம் கண்டறிந்து கூறியது. அதேபோல, செவ்வாய் கிரகத்தில் பருவகால மாற்றம் நிகழ்கிறது என்பதையும் ஒருகாலத்தில் அங்கு மேகங்கள் சூழ்ந்து, மழை பெய்திருக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் மங்கள்யான்தான் முதலில் கண்டுபிடித்தது. இந்த கண்டுபிடிப்பை நாசாவும் உறுதிசெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x