

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வுக் கூட்டத்தில் பல்வேறு மாற்றங்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நடைமுறைப் படுத்தி அரசு அதிகாரிகளை கதிகலங்கச் செய்தார். ஆட்சியரின் புதிய மாற்றங்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். மக்கள் குறை தீர்வுக்கூட்டத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முதலில் மாற்றுத்திறனாளிகள் இருப்பிடத்துக்கு சென்று அங்கு அவர்களிடம் மனுக்களை பெற்றார்.
பிறகு, மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் அறைக்கு சென்ற ஆட்சியர் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு, தனித் துணை ஆட்சியர் கோவிந்தனை அழைத்து, மனுக்களை பொது மக்கள் நேரடியாக இங்கு வழங்க 6 கவுன்டர்களை திறக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் மனுக்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி வரும் பொதுமக்கள் இனி நேரடியாக உள்ள நுழைவு வாயில் வழியாக அதிகாரிகளை சந்திக்க வரலாம் என அறிவுறுத்தினார்.
அதன் பிறகு, இருக்கைக்கு வருவார் என எதிர்பார்த்த நிலையில், நுழைவு வாயிலில் பல மணி நேரம் மனுக்களுடன் காத்திருந்த பொது மக்களை தேடி மாவட்ட ஆட்சியர் சென்றார். அங்கு நுழைவு வாயிலை திறக்க உத்தரவிட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் வாசலில் நின்றபடியே ஒவ்வொருவராக அழைத்து அவர்களிடம் மனுக்களை வாங்கி அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.
இதை பார்த்ததும் சக அதிகாரிகளும், அரசு அலுவலர்களும் செய்வதறியாமல் திகைத்தனர். நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகமானதை கண்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், கூட்ட அரங்கில் ஒரு புறம் அமர்ந்திருந்த அரசு அலுவலர்களை அங்கிருந்து எழுந்து அடுத்த புறத்துக்கு செல்ல உத்தரவிட்டார்.
மனுக்களுடன் காத்திருந்த பெண்கள், வயதானவர்கள், கைக்குழந்தையுடன் இருந்தவர்களை அழைத்து கூட்ட அரங்கில் அரசு அலுவலர்களுக்கு சமமாக உட்காரச்செய்தார். பிறகு, தனித்துணை வட்டாட்சியர் மூலம் ஒவ்வொரு மனுதாரரை அழைத்து, அவர்கள் கொண்டு வந்த மனுக்களின் விவரம் என்ன? எந்த துறையைச் சார்ந்தது?
அதற்காகன அரசு அலுவலர் யார்? என கேட்டு மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் அரசு அலுவலர்கள் நேரில் சென்று அவர்களின் குறைகளை கேட்ட பிறகு, ஆட்சியரிடம் அரசு அலுவலரும், மனு அளிக்க வந்தவரும் ஒன்றாக வந்து பிரச்சினையை சொல்ல வேண்டும் என அதிரடி காட்டினார்.
இதையடுத்து, தனித்துணை வட்டாட்சியர் பழனி மனுதாரரின் பெயர்களை வாசித்து, அவர்கள் கொண்டு வந்த பிரச்சினையை சரி செய்யக்கூடிய அரசு அலுவலரை அழைத்து அவர்களுடன் மனுதாரரும் ஆட்சியரிடம் சென்று தங்களுக்கான குறைகளை எடுத்துக்கூறினர். அதற்கான தீர்வை அந்த அரசு அலுவலர் முன்னிலையிலேயே ஆட்சியர் தீர்த்து வைத்தார்.
ஆட்சியர் பாஸ்கரபாண்டியனின் இந்த அதிரடி மாற்றத்தால் அரசு அதிகாரிகளும், அரசு அலுவலர்களும் கதிகலங்கி போனாலும், மனுக்களுக்கான தீர்வு காண பல மாதங்களாக அலைந்து, திரிந்த பொதுமக்கள், தங்களுக்கான பிரச்சினை வெகு விரைவில் தீரும் என்று நம்பிக்கையுடனும், ஆட்சியர் பாஸ்கர பாண்டியனின் இந்த அதிரடி மாற்றத்தை வெகுவாக பாராட்டியபடி சென்றனர்.
மனுக்களுடன் காத்திருந்த பெண்கள், வயதானவர்கள், கைக்குழந்தையுடன் இருந்தவர்களை அழைத்து கூட்ட அரங்கில் அரசு அலுவலர்களுக்கு சமமாக உட்காரச்செய்தார்.