

மவுலிவாக்கம் கட்டிட விபத்து சம்பவத்தில், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் வழங்கிய திட்ட அனுமதியில் சிறிதும் விதிமீறல் இல்லை என்று சட்டப்பேரவையில் வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் கூறினார்.
சட்டப்பேரவையில் வீட்டுவசதித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பேசியதாவது:
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) திட்ட அனுமதி விண்ணப்பத்தை பரிசீலிக்கும் போது, அந்த நிலத்தில் கட்டிடம் கட்ட விண்ணப்பிக்க விண்ணப்ப தாரருக்கு உரிமம் உள்ளதா என்று பரிசீலிக்கும். அடுத்து திட்ட அனுமதி வேண்டிய வரைபடம், வளர்ச்சி விதிகளை பூர்த்தி செய் கிறதா என்று கூர்ந்தாய்வு செய்யப் படும். வளர்ச்சி விதிகள் என்பது நில உபயோகம், சாலையின் அகலம், கட்டிடத்தின் உபயோகம், கட்டிடத் தின் உயரம், பக்க இடைவெளிகள், கட்டுமானப் பரப்பளவு, திறந்தவெளி ஒதுக்கீடு, வாகன நிறுத்துமிடம் போன்றவை ஆகும்.
முழுமையாக பின்பற்றப்பட்ட விதிகள்
குடியிருப்புகள் கட்டுவதற்கான மனை, ஆதாரக் குடியிருப்பு அல்லது கலப்புக் குடியிருப்பு பகுதியில் இருக்க வேண்டும். மவுலிவாக் கம் இடமானது முழுமைத் திட்டத் தின்படி கலப்புக் குடியிருப்பு பகுதியாக வரையறுக்கப்பட்டுள் ளது. மவுலிவாக்கம் மனையின் அளவு 3,986.17 ச.மீ. (42,907 சதுர அடி), தளப் பரப்பளவு கட்டுமானத் தின் பரப்பு 10,375.71 ச.மீ. (1,11,684 சதுர அடி). அனுமதி அளிக்கப்பட்ட புளோர் ஸ்பேஸ் இண்டக்ஸ் (எப்எஸ்ஐ) 2.61. இந்த இடத்தில் 60 மீட்டர் உயரம் வரை கட்டிடம் கட்ட அனுமதிக்கலாம். மவுலிவாக்கம் கட்டிடத்தின் உயரம் 35.62 மீட்டர். இதற்கு 8 மீட்டர் சுற்றிவர பக்க இடைவெளி விடவேண்டும். இந்த விதி முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளது.
மனை பரப்பில் 50% வரை கட்டிடத் தின் பரப்பளவை அனுமதிக்கலாம். ஆனாலும், 24.65% மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி ஒதுக்கீட்டு இடம் 98 ச.மீ. ஒதுக்கவேண்டும் அல்லது அதற்குரிய நிலமதிப்பை செலுத்தவேண்டும். அவர்கள் நிலமதிப்பு செலுத்தியுள்ளனர்.
சாலை அகலம்: விதிமீறல் இல்லை
தீயணைப்புத்துறை, போக்கு வரத்துக் காவல்துறை, இந்திய விமான நிலைய ஆணையம், மெட்ரோ வாட்டர் துறைகளிடம் இருந்து தேவைப்படும் தடையின் மைச் சான்றிதழ்களும் பெறப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சாலைக்காக தேவைப்படும் 18 மீட்டர் அகலம், மனையில் இருந்து 500 மீட்டர் நீளத்துக்கு இருக்க வேண்டும். வருவாய்த் துறையிடம் இருந்து சாலையின் அகலத்தைக் குறிக்கும் வரைபடம் பெறப்பட்டது. அதில் 18.0 மீட்டருக்கு மேல் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சாலையில் மின்மாற்றி இருப்பதால் ஒரு மீட்டர் நீளத்துக்கு மட்டும் சாலை அகலம் 17.90 மீட்டராக இருந்தது. இந்த குறைவுகூட 0.55 சதவீதமே. இதிலும் விதிமீறல் இல்லை.
976 கட்டிடங்களுக்கு அனுமதி
தற்காலிக கூரை அமைக்கப்பட்ட கட்டிடத்துக்கு தேவையான 5 அடி பக்க இடைவெளி குறைந்தது. இத் தகைய குறைபாடுகளை அனைத்து நேர்வுகளிலும் ‘டிஸ்கிளைமர்’ செய்து திட்ட அனுமதி வழங்கப் படுகிறது. பலமாடி கட்டிட குழுவும் இதை பரிந்துரை செய்தது. அரசும் ஏற்றுக்கொண்டது. இதுதான் நடைமுறை. இந்த நடைமுறையை பின்பற்றி 1984-ல் இருந்து இதுவரை 976 பல மாடிக் கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடங்களில் இதுபோன்று எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை.
உரிமையாளரே முழு பொறுப்பு
மண்ணின் தன்மை, கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து சிஎம்டிஏ கூர்ந்தாய்வு செய்வதில்லை. சிஎம்டிஏ அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டே மவுலிவாக்கம் கட்டிடத்துக்கு திட்ட அனுமதி வழங்கியுள்ளது. கட்டுமானப் பணி முடிந்த பிறகு, கட்டப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்து அது திட்ட அனுமதி வரைபடத்தின்படி கட்டப்பட்டிருந்தால், சிஎம்டிஏ பணி நிறைவுச் சான்றிதழ் வழங்கும். இந்த நிலையிலும் கட்டிடத்தின் நீள அகலங்கள், உயரம், உபயோகம், பக்க இடைவெளிகள் ஆகியன திட்ட அனுமதி வரைபடப்படி உள்ளதா என்று பரிசீலிக்கும். இந்த நிலையில்கூட கட்டிட வடிவமைப்பாளரிடமிருந்து கட்டிட உறுதித் தன்மைக்கான சான்று பெறப்படும். கட்டுமானத்தில் உபயோகப்படுத்தப்படும் பொருட்களின் தரம், கட்டுமானப் பணியின் தரம் ஆகியவற்றைப் பொறுத்தே அதன் உறுதித்தன்மை அமையும். ஆகையால் அதற்கு முழுப் பொறுப்பும் கட்டிட உரிமையாளரையே சாரும்.
விபத்துக்கு என்னதான் காரணம்?
கட்டுமான அபிவிருத்தியாளர் கள் சங்கங்களின் கூட்டமைப்பால் (கிரெடாய்) அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவைச் சேர்ந்த ஐஐடி பேராசிரியர் சாந்தகுமார், பெங்களூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் பேராசிரியர்கள் தரன் மற்றும் புஜ்ஜார், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயா ஆகியோர் கட்டுமான தரக்குறைவும், போதுமான அளவுக்கு பவுண்டேஷன் அமைக்கப்படாததுமே விபத்துக்கு காரணம் என்று கூறியுள்ளனர்.
நியாயப்படுத்தவில்லை
மவுலிவாக்கம் விபத்தை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. அது மிகவும் துக்ககரமான, வருந்தத்தக்க துயர சம்பவம்தான். அதனால்தான், முதல்வர் ஓடோடிச் சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தி, ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கி ‘உங்களுக்கு எப்போதும், எந்த நிலையிலும் உடனிருக்கிறேன்’ என்று தாயுள்ளத்துடன் அன்பு காட்டினார்.
இங்கே 0.55 சதவீத சாலை அகல குறைபாட்டை தளர்த்தியது குறித்து விமர்சனம் செய்தவர்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் 55 சதவீத விதிமீறலை தளர்த்தியுள்ளார்கள்.
இவ்வாறு அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.