

புதிய எல்லைகளைத் தொட்டு உயர்ந்து செல்கிறது தேசம்: மோடி: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆசியாவின் மிகப் பெரிய ‘ஏரோ இந்தியா' சர்வதேச விமான கண்காட்சி திங்கள்கிழமை கோலாகலமாக தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "புதிய இந்தியாவின் திறமைக்கு பெங்களூருவின் இன்றைய வான்வெளி சாட்சியாகிக் கொண்டிருக்கிறது. புதிய உயரங்களே புதிய இந்தியாவின் முகம் என்பதற்கு இந்த வான்வெளி சாட்சியாகிக்கொண்டிருக்கிறது. தேசம், புதிய உயரங்களைத் தொட்டு அதனைக் கடந்தும் செல்கிறது. பெருகிவரும் இந்தியாவின் திறமைக்கு "ஏரோ இந்தியா 2023" ஓர் உதாரணமாகும். இந்த கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்றிருப்பது உலகநாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது" என்றார்.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் முதல் மூன்று நாட்கள் வியாபாரிகளுக்காக நடக்கிறது. கடைசி இரண்டு நாளில் பொதுமக்கள் விமான கண்காட்சியை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் அதிருப்தி: தமிழக அரசு நடைமுறைப்படுத்திவரும் முத்திரைப் பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தளத்திலுள்ள கூட்ட அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர், "பொதுவாக, திட்டங்களை அதிகாரிகளின் குழந்தைகள் என்று சொல்வார்கள். அதிகாரிகள் கவனித்துப் பேணிக் காத்தால், அவை வளரும். அதிகாரிகள் கவனிக்கத் தவறினால், அவை மெலியும். ஆனால், நமது மாநிலத்தில், பல துறைகளில், பல திட்டங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேசமயம், சில திட்டங்களில் காணப்படும் தொய்வினையும், சுணக்கத்தையும் கவனித்தேன். அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் எனக்கு இருக்கிறது" என்று தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் சொல்வதைப் பேசுகிறார் ஆளுநர்: திமுக: ஆர்எஸ்எஸ் சொல்வதை ஆளுநர் ஆர்.என்.ரவி அப்படியே பேசுவதாக திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி குறித்த இரண்டு புத்தகங்களின் தமிழ் பதிப்பின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ‘தமிழகத்தில் சமூகநீதி பற்றி பரவலாக பேசுகிறோம். ஆனால், குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது, கோயிலுக்குள் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பது, அங்கன்வாடியில் தரையில் அமர வைப்பது போன்ற நிகழ்வுகள் இங்கு தொடர்ந்து நடக்கின்றன. அமைதி நிலவும் சமுதாயத்தை பிளவுபடுத்த சிலர் முயற்சிக்கின்றனர். அதை சரிசெய்ய வேண்டும்’ எனப் பேசியிருந்தார்.
அவரது இந்த பேச்சு திமுகவையும், தமிழக அரசையும் மறைமுகமாக விமர்சிப்பதாக இருந்ததைத் தொடர்ந்து, திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அதற்கு பதில் அளித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘ஆளுநர்கள் மட்டுமின்றி, பாஜக தலைவர்கள் யாரும் பிரதமர் முதல் கீழ்மட்ட உறுப்பினர்கள் வரை சுயமாக பேச முடியாது. பேசச் சொன்னதைத்தான் பேச வேண்டும். சுயசிந்தனை உள்ளவர்களுக்கு பாஜகவிலோ ஆர்எஸ்எஸ்ஸிலோ இடமில்லை. உயரதிகாரிகளின் உத்தரவுக்கு அவர்கள் கீழ்படிய வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார். மேலும், “தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கும் கல்வியும் வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டது. திராவிட ஆட்சி காரணமாகத்தான் அவர்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைத்தது” என்று அவர் குறிப்பிட்டார்.
தி.மலை ஏடிஎம்களில் கொள்ளை: விசாரணை நிலவரம்: மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேச மாநில ஏடிஎம் கொள்ளையிலும், திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளது ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களா என 3 நாட்களில் முடிவு தெரியவரும் என்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் 3 ஏடிஎம் மையங்கள் மற்றும் தனியார் வங்கியின் ஒரு ஏடிஎம் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தக் கொள்ளையில் வட மாநில கும்பல் ஈடுபட்டிருப்பதும், அவர்கள் பயன்படுத்திய காரில் இருந்த ஆந்திர மாநில பதிவு எண் போலியானது என காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளன.
நான்கு ஏடிஎம் மையங்களில் நடைபெற்றுள்ள கொள்ளை தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன், திருவண்ணாமலையில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
விசாரணை நிலவரம் குறித்து அவர் கூறும்போது, “சில துப்புக்கள் கிடைத்துள்ளன. எங்களுக்கு கிடைத்துள்ள தடய அறிவியல் சோதனையின் ஆதாரங்களால் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம். ஒரே கும்பலை சேர்ந்தவர்களே ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என சந்தேகிக்கிறோம். ரோந்து பணியை சரியாக மேற்கொள்ளாத காவல் துறையை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவிததார்.
“பாதுகாப்பற்ற சூழலில் தமிழகம்” - அண்ணாமலை குற்றச்சாட்டு: "ஒட்டுமொத்த அமைச்சர்களையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்கு அனுப்பிவிட்டு, பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உண்டாக்கி, அதில் தமிழகத்தைத் தள்ளியிருக்கிறது திறனற்ற திமுக அரசு" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
மார்ச் 13 வரை நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்திவைப்பு: காங்கிரஸ் எம்.பி. ரஜனி பாட்டீல் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரியும், அதானி விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி அவை நடவடிக்கைகளை முடக்கினர். இந்நிலையில், மாநிலங்களவை மார்ச் 13-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், மக்களவையிலும் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நிறைவு பெற்றது.
ஜம்மு - காஷ்மீர் எல்லை நிர்ணயத்திற்கு எதிரான மனு தள்ளுபடி: ஜம்மு - காஷ்மீருக்கான சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற எல்லைகளை வரையறுக்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி ஆணையம் ஒன்றை அமைத்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பி தேசாய் தலைமையிலான இந்த ஆணையம், தனது அறிக்கையை கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்த புதிய எல்லை வரையறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஜம்மு - காஷ்மீரில் புதிய எல்லை வரையறை மூலம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.
மகளிர் ப்ரீமியர் லீக் முதல் சீசனுக்கான ஏலம்: முதல் மகளிர் ப்ரீமியர் லீக் சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பை நகரில் துவங்கியது. மொத்தம் 5 அணிகள் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளன. இந்த லீக் சீசனில் விளையாடும் வகையில் 448 வீராங்கனைகள் ஏலத்தில் பதிவு செய்துள்ளனர். இந்தியாவை சேர்ந்த 269 வீராங்கனைகள், வெளிநாடுகளை சேர்ந்த 179 வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், அலிசா ஹீலி போன்ற நட்சத்திர வீராங்கனைகளும் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு அணியும் 15 முதல் 18 வீராங்கனைகளை இந்த ஏலத்தில் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், முதல் சீசனுக்கான மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை 3.4 கோடி ரூபாய்க்குராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியுள்ளது. தனக்கிருந்த டிமாண்டை பார்த்து ஸ்மிருதி உற்சாகத்தில் திகைத்துப் போயுள்ளார். அவருக்கு சக இந்திய அணி வீராங்கனைகள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
சீனா மீது பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு: தென் சீனக் கடலில் ஆபத்தான சூழ்ச்சிகளை சீனா செய்வதாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து பிலிப்பைன்ஸ் கடலோர காவல் படை கூறும்போது, ‘எங்கள் நாட்டு ராணுவ வீரர்களுக்கு உணவளிக்க வந்த கப்பலை சீனா தாக்கியுள்ளது. இது பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் எங்களது இறையாண்மையை பறிக்கும் செயல். தென் சீன கடலில் சீனா ஆபத்தான சூழ்ச்சிகளை செய்வதாக தெரிகிறது. கடந்த நவம்பர் மாதமும் இவ்வாறே எங்கள் கப்பலை சீனா தடுத்து நிறுத்தியது’ என்று தெரிவித்துள்ளது.
தவிக்கும் சிரியாவுக்கு உதவிக்கரம் நீளுமா?: துருக்கியில் ஏற்பட்ட வரலாறு காணாத பூகம்பத்தால் துருக்கி மற்றும் அதன் அண்டை நாடான சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,800-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் மேற்குலக பொருளாதாரத் தடை, உள்நாட்டுப் போர், போதிய மருத்துவக் கட்டமைப்பு வசதியில்லாத நிலையில் சிரியாவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் இந்த பூகம்பத்தால் அங்குள்ள மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
ஏற்கெனவே போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவிற்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்ப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதை கவலையுடன் ஐ.நா. சபை ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் இந்த பூகம்பத்தால் உயிரிழப்பு 70 ஆயிரத்தையும் கூட கடக்கலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளது.