

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக அரசு ஊழியர் சங்கங்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல் படுத்தப்பட்டன. அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் முன்தேதி யிட்டு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு ஊழி யர்கள், ஆசிரியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல் படுத்த வேண்டும் என்று அரசுப் பணி யாளர்கள், ஊழியர்கள் சங்கங்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அதுவரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தின.
இந்நிலையில், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக குழு அமைக்கப்படும். அக் குழுவினர் அளிக்கும் பரிந்துரையின் பேரில், ஊதிய உயர்வு அமல்படுத்தப் படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, நிதித்துறை செயலர் கே.சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் தங்கள் கருத்துகளை கேட்க வேண்டும் என அரசு ஊழி யர்களும் ஆசிரியர் சங்கங்களும் கோரிக்கை விடுத்தன. கடந்த 16-ம் தேதி நடந்த குழுவின் கூட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களிடம் கருத்துகளை கேட்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அங்கீகாரம் பெற்ற சங்கங்களிடம் மே 26, 27 தேதிகளிலும், அங்கீகாரம் பெறாத சங்கங்களிடம் ஜூன் 2, 3 தேதிகளிலும் கருத்து கேட்கப் படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட சங் கங்களிடம் கருத்து கேட்கும் கூட்டம், சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. நிதித்துறை செயலர் கே.சண்முகம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தங்கள் கோரிக் கைகளை மனுக்களாக அளித்தனர்.
தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் சார்பில் அதன் தலைவர் ஜெ.கணேசன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், அதிகாரிகள் முதல் கீழ்நிலையில் பணியாற்றுபவர்கள் வரை சம்பள விகிதம், சம்பள உயர்வு நேரத்தில் அவர்களுக்கான ஊதிய நிலை, சிறப்பு ஊக்கத்தொகை, உயர் படிப்புகளுக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக நிதித்துறை செயலர் சண்முகம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் 149 அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களும், 100-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத சங்கங்களும் உள்ளன. காலை, மாலை இரு வேளையும் கருத்து கேட்கப்படுகிறது. 6-வது ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்பட்ட பிறகு 7-வது ஊதியக் குழுவை அமலாக்க அரசு ஊழியர் சங்கங்கள் கோரியுள்ளன. புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி அமைக்க இந்தக் குழுவுக்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். சங்கங்களின் கருத்துகளை கேட்டு ஜூன் இறுதியில் அரசுக்கு அறிக்கை அளிப்போம்’’ என்றார்.
இன்று 2-வது நாளாக அங்கீகரிக் கப்பட்ட சங்கங்களின் கருத்து கேட்கும் கூட்டம் நடக்கிறது.