

அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் 38 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் கேட்டு உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் முன்பதிவு செய்துள்ளனர். பொதுமக்களின் தேவை கருதி, பதிவுக்கான அவகாசம் மே 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 70 லட்சம் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் உள் ளனர். இந்நிறுவனத்துக்கு டிஜிட் டல் ஒளிபரப்பு உரிமம் கிடைத் துள்ளதைத் தொடர்ந்து, டிஜிட்டல் ஒளிபரப்புக்குத் தேவையான செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்ய அரசு கேபிள் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் தங்களுக்குத் தேவையான எஸ்டி, எச்டி செட்டாப் பாக்ஸ்களின் எண்ணிக்கை குறித்து அரசு கேபிள் நிறுவனத்திடம் மே 14-ம் தேதிக்குள் (இன்று) தெரிவிக்குமாறு அறிவிக் கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அவகாசம் மே 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:
அரசு கேபிள் டிவி நிறுவனத் தில் ஏற்கெனவே உள்ளூர் கேபிள் ஆபரேட்டர் எண் பெற்று செயல் படுபவர்கள் இந்நிறுவனத்தின் டிஜிட்டல் சிக்னலை பெற்று, தொடர்ந்து தொழில் செய்ய ஏதுவாக, இந்நிறுவனத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர் அவர்கள் தங்களுக்கு தேவைப்படும் எஸ்டி, எச்டி செட்டாப் பாக்ஸ் எண்ணிக்கை குறித்து இணையதளத்தில் (www.tactv.in) மே 14-க்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. கேபிள் ஆபரேட்டர்கள் இதுவரை 38 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் கோரி பதிவு செய்துள்ளனர்.
பொதுமக்களுக்கு எஸ்டி, எச்டி ஆகிய 2 வகையான செட்டாப் பாக்ஸ்களில் எது தேவை தேவை என அறிந்து பதிவு செய்ய கேபிள் ஆபரேட்டர்கள் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளனர். எனவே, இந்த அவகாசம் மே 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆபரேட்டர்கள் மாவட்ட அளவிலான மையத்தில் இருந்து இணைப்பு பெற்று, பொதுமக்களுக்கு கேபிள் இணைப்புகளை வழங்கி வருகின் றனர். இனி, தாலுகாதோறும் மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
எனவே, ஆபரேட்டர்கள் தாங்கள் ஒளிபரப்பு சிக்னலை பெற விரும்பும் தாலுகா குறித்து மே 21-ம் தேதிக்குள் இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.