

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பகுதியில் பூத்துக் குலுங்கும் மர ரோஜா மலர்களைக் காண, விடுமுறை நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
கொடைக்கானல் மலைப் பகுதியில் அரிய வகை பூச்செடிகள், தாவரங்கள், மரங்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் குளிர்ந்த காலநிலை நிலவுவதால், இங்கு மலைப் பயிர்கள் மட்டுமின்றி, அலங்காரப் பூச்செடிகள், பல்வேறு வகை மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா, ரோஸ் கார்டன், செட்டியார்பூங்கா மற்றும் சாலையோரங்களில் பல்வேறு பூச்செடிகள், அரிய வகைமரங்கள் உள்ளன. அதேபோல, ரோஜா செடிகளைப் போல, ரோஜாமரங்களும் அதிகம் உள்ளன.
இந்நிலையில், கோடைகாலத்தை வரவேற்கும் வகையில், அதிக அளவில் ரோஜாப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவை சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் பூத்துக் குலுங்குவது ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்தப் பூக்களை சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
கொடைக்கானலில் விடுமுறை நாளான நேற்று பிரையன்ட் பூங்கா,ரோஸ் கார்டன், மோயர் பாயின்ட், குணா குகை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அவ்வப்போது இதமானவெயிலுடன், குளிர்ந்த காற்றும்வீசியது சுற்றுலாப் பயணிகளை பெரிதும் மகிழ்வித்தது.
முக்கிய சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.