

மத்திய பாஜக அரசு இனி எந்த ஒரு சட்ட திட்டத்தை கொண்டுவர முயற்சித்தாலும் அது பொதுமக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய பாஜக அரசு ஜிஎஸ்டி என்ற புதிய சரக்கு மற்றும் சேவை வரியை நாடு முழுவதும் வருகின்ற ஜூலை முதல் தேதியில் இருந்து அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த வரியினால் 5 முதல் 28 சதவீத வரி வரம்பில் பல்வேறு பொருட்களுக்கு வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் 81 சதவீத பொருட்கள் 18 சதவீதம் வரை வரி வரம்பிற்குள் வருகின்றது. குறிப்பாக தேநீர், காபி, சமையல் எண்ணெய், கை பம்புகள், டிராக்டர், மிதிவண்டி, விளையாட்டுப்பொருட்கள், பற்பசை போன்ற பல்வேறு பொருட்கள் தேசிய சரக்கு மற்றும் சேவை வரியின் கட்டுப்பாட்டிற்குள் விற்பனைக்கு வர இருக்கின்றது. மேலும் இந்த வரியினால் கட்டுமானத்தொழில் மற்றும் உணவகங்கள் பெருமளவு பாதிக்கப்படும்.
இந்நிலையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் தென் மாநிலங்களில் மட்டும் சுமார் 5 லட்சம் உணவகங்கள் மூடப்பட்டதல் சுமார் ரூ. 500 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அதே போல தமிழகத்திலும் சுமார் 2 லட்சம் உணவகங்கள் மூடப்பட்டதால் சுமார் ரூ. 150 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மூடப்பட்டதால் அன்றாட உணவிற்கு உணவகங்களை நம்பி இருக்கின்ற பெரும்பாலானோர் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
மேலும் நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நடைபெற்ற மருந்து கடை அடைப்பால் சுமார் 31 ஆயிரம் மருந்து கடைகள் மூடப்பட்டிருந்தது. இதனால் சுமார் ரூ. 40 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மருந்து கடை அடைப்பால் அவசர தேவைக்கு மருந்து வாங்க முடியாமல் பொது மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
எனவே நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கும் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்திற்கும் பெரும் எதிர்ப்பு உள்ளதால் மத்திய பாஜக அரசு இந்த விஷயத்தில் வணிகர்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்ப முடிவு எடுக்க வேண்டும்.
மேலும் ஆன்லைன் வர்த்தகத்தால் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக மருந்துப் பொருட்களை மருந்துக் கடைகளில் நேரடியாக வாங்கும் போதே விலை மற்றும் தேதிகளில் மாற்றம் உள்ளது. மருந்து சம்பந்தமாக சந்தேகம் வரும் போது மருந்துக் கடைகளில் நேரடியாக அதனை தீர்த்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால் ஆன்லைன் மூலம் மருந்து வாங்கும்போது மருந்துக்கான விலையும், தேதியும் மாறும் போது பாதிக்கப்படுவது நுகர்வோர் தான்.
மேலும் மருந்து கடை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பவர்கள் பெருமளவு வியாபாரத்தை இழக்கக்கூடிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள். எனவே மத்திய பாஜக அரசு ஆன்லைன் வர்த்தகத்தில் குறிப்பாக மருந்து பொருட்களை கொள்முதல் மற்றும் விற்பனை செய்யும் முறையை தவிர்க்க முன்வர வேண்டும்.
மத்திய பாஜக அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை மற்றும் ஆன்லைன் வர்த்தகம் ஆகியவற்றில் வணிகர்களுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு அவர்களின் கருத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்த முன் வந்திருந்தால் கடைகள் மூடப்படாமல், வர்த்தகம் பாதிக்கப்படாமல், பொது மக்கள் அவதிப்பட்டிருக்க மாட்டார்கள்.
எனவே மத்திய பாஜக அரசு இனி எந்த ஒரு சட்ட திட்டத்தை கொண்டுவர முயற்சித்தாலும் அது பொது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.