

சென்னை: மியாட் மருத்துவமனையின் 24-வதுநிறுவனர் தின விழா நடைபெற்றது. சென்னை மணப்பாக்கத்தில் மியாட் மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையின் 24-வது நிறுவனர் தினவிழா, நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் விழாவுக்கு தலைமை வகித்தார்.
மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். நிறுவனர் பி.வி.ஏ. மோகன்தாஸ், திரைப்பட தயாரிப்பாளர் கிருத்திகா உதயநிதி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். சிறந்த மருத்துவ சேவை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
கிருத்திகா உதயநிதி பேசும்போது, ‘‘இந்த மருத்துவமனை மிகவும் ரம்மியமான சுகாதார சூழலில் அமைந்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் சேவைமனப்பான்மையுடன் பணியாற்றி வருகின்றனர். 40 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட இந்தமருத்துவமனை, தற்போது 1,000 படுக்கை வசதிகள், பல்துறைகளுடன் சிறப்பாக செயல்படுகிறது. இதன் வளர்ச்சிக்கு நிறுவனர் மோகன்தாஸ்தான் காரணம். அவர், நோயாளிகளை கவனிக்கும் விதம் தாயுள்ளம் கொண்டது’’ என்றார்.
மருத்துவர் பிரித்வி மோகன்தாஸ் பேசும்போது, ‘‘இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சமீபத்திய சுகாதார பாதுகாப்பு கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்வதில் மியாட் முன்னோடியாக இருந்து வருகிறது. கரோனா தொற்று போன்ற சவால்கள்கூட இம்மருத்துவமனையின் முயற்சிகளுக்கு ஒரு தடையாக இருக்கவில்லை. கரோனா தொற்றுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. 2022-ல் தமிழகத்திலேயே முதன்முறையாக முழு உடல்சிடி ஸ்கேன் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது” என்றார்.