

கேரள அரசு மறு ஆய்வு மனு செய்துள்ள நிலையில், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு அடுத்து என்ன செய்யப் போகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
டெல்லிக்கு சென்ற கேரள முதல்வர், ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தினால், அணையைச் சுற்றியுள்ள ஐந்து கரையோர மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும். அணை பாதுகாப்பு தொடர்பாக கேரளாவில் நிலவும் அச்சத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என மறு ஆய்வு மனுவில் வலியுறுத்தியுள்ளோம்.
ஒருவேளை கேரளத்துக்கு சாதகமான நிலை காணப்படாவிட்டால், குடியரசுத் தலைவர் மூலம் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெளிவுரை கோரும் நடவடிக்கையை மேற்கொள்வதா அல்லது வேண்டாமா என்பதை சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்து முடிவெடுப்போம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
கேரளா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உள்ளிட்டவர்களோடும் கேரள முதல்வர் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
மத்திய அரசு அமைத்த கண் காணிப்புக் குழு, தனது செயல்பாட்டைத் தொடங்கும் முன்பே, மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு அனுமதிக்கவும், அதன்மீது முடிவெடுக்கும் வரை கண்காணிப்புக் குழுவின் செயல் பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்திடம் கேரளா கேட்டுள்ளது.
1980-ம் ஆண்டிலேயே அணையைப் பலப்படுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டு 1998-ல் நிறைவுற்றது. வட மாநிலங் களைச் சேர்ந்த 12 பேர் கொண்ட நிபுணர் குழுவை டாக்டர் எஸ்.எஸ். பிரார் தலைமையில் மத்திய அரசு நிய மித்தது, அந்தக் குழு முல்லை பெரியாறு அணையை நேரில் ஆய்வு செய்தது.
அணை பலமாக உள்ளது, 145 அடி தண்ணீர் தேக்கலாம் என்று அறிக்கை கொடுத்தது. இந்த அறிக்கையை கேரள அரசு ஏற்க மறுத்தது. அதன்பிறகு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும், அணை மிகுந்த பலத்துடன் இருப்பதாக தெரிவித்தது. அதனடிப்படையில்,அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த அண்மையில் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. இதற்குப் பிறகும் கேரள அரசு அணை பலவீனமாக இருப்பதாகத் தெரி வித்து, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை இப்போது தாக்கல் செய்துள்ளது.
இதுபற்றியெல்லாம் கவலைப்படவோ, ஆலோசிக்கவோ தமிழகத்திலே ஓர் அரசு இருக்கிறதா? அந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தங்களுக்கு பெருவாரியாக வாக்களித்து விட்டார்கள்.
எனவே, தங்களைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்களா?
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.