

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 45 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் துரப்பண கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதில், திருவாரூர் அருகேயுள்ள பெருந்தரக்குடி ஊராட்சிக்குட்பட்ட மேப்பலம் என்ற இடத்தில் 2001-ம் ஆண்டு முதல் கமலாபுரம் 29 என்கிற துரப்பண கிணறு அமைக்கப்பட்டு, கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வந்தது. இந்த கிணற்றில் 2017-ம் ஆண்டு கச்சா எண்ணெய் உற்பத்தி நின்றுவிட்டதால், இந்த கிணற்றை ஓஎன்ஜிசி நிர்வாகம் மூடிவிட்டது.
தற்போது, 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கிணற்றில் கடந்த ஓரிரு நாட்களாக மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளும் பொதுமக்களும் ஓஎன்ஜிசியின் இந்தப் பணி தொடர்ந்து நடைபெறக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, காரைக்கால் ஓஎன்ஜிசி அலுவலகத்தில் விசாரித்தபோது, “இங்கு ஹைட்ரோகார்பன் எடுக்கவில்லை. கச்சா எண்ணெய் தற்போது உற்பத்தி ஆகிறதா என்பதைத்தான் ஆய்வு செய்து வருகிறோம். கச்சா எண்ணெய் கிடைத்தால் பணிகள் தொடரும். இல்லையெனில் இந்த கிணறு வழக்கம் போல மூடப்படும்” என தெரிவித்தனர்.
இதற்கிடையே, மேப்பலத்தில் ஓஎன்ஜிசி பணிகள் நடைபெறக் கூடாது என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(பிப்.13) கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.