

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று அதிகாலை 3.45 மணிக்கு தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள ஆம்புலன்ஸ் சேவை மைய கட்டுப்பாட்டு அறையின் ‘108’ எண்ணைத் தொடர்பு கொண்ட ஒரு பெண், “குஷ்பு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சற்று நேரத்தில் வெடிக்கும்” என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள், தேனாம்பேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பட்டினப்பாக்கம் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள குஷ்புவின் வீட்டுக்கு தேனாம்பேட்டை போலீஸாரும், மயிலாப்பூர் போலீஸாரும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்றனர்.
சோதனையில் வெடி பொருட்கள் ஏதும் சிக்க வில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. போலீஸார் விசாரணையில் மிரட்டல் விடுத்தது உடுமலைபேட்டையைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண் என்பது தெரியவந்தது. எதற்காக அவர் மிரட்டல் விடுத்தார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.