

தாம்பரத்தில் இந்திய விமானப் படை பயிற்சி மையம் உள்ளது. இங்கு ஏர் கிராஃப்ட்மேனாக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த குல்பீர் சிங் (23) பணியாற்றி வந்தார். ஏற்கெனவே அசாமில் உள்ள மையத்தில் பயிற்சியை முடித்த இவர், எம்சிஐ பயிற்சிக்காக தாம்பரம் மையத்துக்கு கடந்த ஏப்ரல் 3-ம் தேதி வந்திருந்தார்.
தாம்பரம் விமானப்படை தளத்தில் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு பணியில் இருந்த குல்பீர் சிங் இரவு 7:30 மணி அளவில் துப்பாக்கியால் திடீரென தன்னைத் தானே தலையில் சுட்டுக்கொண்டார். குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு, அப்பகுதியில் இருந்த விமானப்படை வீரர்கள் ஓடிவந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் அவர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து உடனடியாக விமானப்படை அதிகாரிகள் மூலமாக சேலையூர் போலீஸா ருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் வந்து அவரது உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். பரிசோத னைக்குப் பிறகு, பயிற்சி மைய அதிகாரிகளிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையில், குல்பீர் சிங் தற்கொலை குறித்து அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது தந்தை எஸ்பால் சிங், உத்தரப் பிரதேசத்தில் விவசாயம் செய்கி றார்.
ஏழைக் குடும்பம் என்பதால் சென்னைக்கு வர இயலாது என அவர்கள் தெரிவித்தனர். இதனால் விமானப்படை விமானம் மூலம் குல்பீர் சிங் உடலை சொந்த ஊருக்கு கொண்டுசெல்ல அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டாரா, பணியில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமா என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.