

காய்த்த மரம்தான் கல்லடி படும்; அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுவதால்தான் அதிமுக அரசு விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது என்று நிதித்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்கும் விழாவில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சென்னையில் மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் விழாவில் அமைச்சர் பேசியதாவது:
''தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1 லட்சத்து 64 ஆயிரம் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி தவிர அனைவருக்கும் ஈசிஎஸ் மூலமாக ரூ.5000 உதவித்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். வேறெந்த மாநிலத்திலும் இந்தத் தொகை வழங்கப்படுவது கிடையாது.
மீன் பிடி தடைக்காலத்தில் பொருளாதார இழப்பை ஈடுகட்ட, நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் நிதியுதவி வழங்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் கசிவு
கச்சா எண்ணெய் கசிவால் சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. அங்கு மீன் பெருக்கத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் 61 நாட்களே தடைக் காலமாக இருக்கிறது. 45 நாட்கள் கிடையாது.
அமைச்சர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். துறைகளில் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் எங்களின் ஆட்சி விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. காய்த்த மரம்தானே கல்லடி படும்!"
இவ்வாறு அவர் பேசினார்.