

திருவண்ணாமலை: பெரம்பூர் நகைக்கடை கொள்ளைக்கும் திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளைக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணையை காவல் துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் நேற்று அதிகாலை கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. கால் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரங்களை வெட்டி, ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வடமாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என தனிப்படை காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட காரை பயன்படுத்தி கொள்ளை கும்பல் தப்பித்து சென்றுள்ளது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. கொள்ளை கும்பலை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் நடைபெற்ற ரூ.73 லட்சம் கொள்ளைக்கும், சென்னை - பெரம்பூரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரபல நகைக்கடையில் 9 கிலோ தங்கம், ரூ.20 லட்சம் கொள்ளைக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. இரண்டு கொள்ளையிலும், ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட கார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட காரின் ஆந்திர மாநில பதிவு எண் போலி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல், திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட காரின் ஆந்திர மாநில பதிவு எண்ணும் போலியாக இருக்கக்கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து தனிப்படை காவல் துறையினர், “வெளிமாநில கும்பல், தமிழகத்தில் ஊடூருவி உள்ளன. எந்த இடங்களில் கொள்ளையடிக்க வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டு, கொள்ளைகளில் மிக தெளிவாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பல இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பித்து சென்றுள்ளனர். பெரம்பூர் நகைக்கடை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளைகளில் கால் வெல்டிங் பயன்படுத்தி உள்ளனர். கொள்ளைகளை அரங்கேற்றிய விதத்தை பார்க்கும்போது, சில நிகழ்வுகள் ஒத்துபோகிறது. எனவே, இதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.