

விழுப்புரம், தருமபுரி, ராமநாத புரத்தில் புதிதாக அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. கல்லூரிக்கான ஆரம்பக்கட்டப் பணிகளை மேற்கொள்ள தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 7 அரசு சட்டக் கல்லூரிகள், ஒரு தனியார் சட்டக் கல்லூரி உள்ளது. மாணவர்கள் நலனைக் கருத்தில்கொண்டு விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரத்தில் தலா ஓர் அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும் என முதல்வர் கே.பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார். இந்தப் புதிய 3 கல்லூரிகளைத் தொடங்கு வதற்கான அரசாணை நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்டுள் ளது. அதில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம், தருமபுரி, ராம நாதபுரம் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற மாவட்டங்களில் சட்டம் பயில விரும்பும் மாணவர்களுக்கு அரசு சட்டக் கல்லூரி இல்லை. இதனால், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த மாணவர்கள், தங்கள் இருப்பிடத்தை விட்டு வேறு மாவட்டங்களில் சிரமப்பட்டு படித்து வருகின்றனர்.
மேலும், இந்த 3 மாவட்டங் களிலும் முதன்மை நீதிமன்றங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களுக்கு மாநிலத்தின் அனைத்துப் பகுதி களில் இருந்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன. எனவே, இப்பகுதிகளில் புதிதாக அரசு சட்டக் கல்லூரிகள் நிறுவலாம் என சட்டக்கல்வி இயக்குநர் அரசுக்கு பரிந்துரைத்தார். அதன் படி விழுப்புரம், தருமபுரி, ராம நாதபுரம் ஆகிய இடங்களில் சட்டக் கல்லூரிகள் இந்தக் கல்வியாண்டு முதல் தொடங்கப்படுகின்றன.
இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளை கவனிப்பதற்காக, விழுப்புரம் கல்லூரிக்கு திருச்சி அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் எஸ்.முருகேசன், தருமபுரி கல்லூரிக்கு கோவை சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் ப.சிவதாஸ், ராமநாதபுரம் கல்லூரிக்கு நெல்லை சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் என்.ராமபிரான் ரஞ்சித் சிங் ஆகியோர் தனி அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர். கல்லூரி தொடங்குவதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ள இவர் களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இக்கல்லூரிகளுக்கு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு மற்றும் இந்திய வழக் கறிஞர் மன்றத்தின் ஒப்புதலைப் பெறும் நடவடிக்கை களை மேற் கொள்ள சட்டக்கல்வி இயக்குந ருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ.6.81 கோடி நிதி ஒதுக்கீடு
இந்த 3 சட்டக் கல்லூரிகளிலும் இந்தக் கல்வியாண்டு முதல் 3 ஆண்டு சட்டப்படிப்பில் தலா 80 மாணவர்கள், 5 ஆண்டு சட்டப்படிப்பில் தலா 80 மாண வர்கள் சேர்க்கப்படுகின்றனர். இக்கல்லூரிகளுக்கு ஆசிரியர், இதர ஊழியர் பணியிடங்கள், புத்தகங்கள், அறைகலன்கள், கணினி உள்ளிட்டவற்றுக்காக கல்லூரிக்கு ரூ.2.27 கோடி வீதம், ரூ.6.81 கோடி நிதிக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த 3 சட்டக் கல்லூரிகளிலும் இந்தக் கல்வியாண்டு முதல் 3 ஆண்டு சட்டப்படிப்பில் தலா 80 மாணவர்கள், 5 ஆண்டு சட்டப்படிப்பில் தலா 80 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.