

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் உயிரிழந்த ஒடிசா தொழிலாளி உடல், 9 நாட்களுக்குப் பிறகு அடையாளம் காணப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த 28-ம் தேதி மாலை 11 மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. கட்டிட இடிபாடுகளில் இருந்து 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் 60 சடலங்களும், தனியாக ஒரு கை, காலும் மீட்கப்பட்டன. அவற்றில் 59 சடலங்கள் பிரேதப் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒரு ஆண் சடலம் மட்டும் அடையாளம் காணப்படாமல் இருந்தது. இந்நிலையில், 9 நாட்களுக்குப் பிறகு அவர் ஒடிசாவைச் சேர்ந்த கோபார்வான் ஸ்வைன் (40) என்பது தெரிந்தது. ஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியில் இருந்து வந்திருந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெல்ட், சட்டையை வைத்து திங்கள்கிழமை அடையாளம் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, டாக்டர்கள் அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த உடல், ஏற்கெனவே ஒடிசா சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருவரது கை, கால் மட்டும் அடையாளம் காணப்படாமல் மருத்துவமனையில் உள்ளது.