

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டம் நேற்றுடன் 200-வது நாளை எட்டியது. இதையொட்டி அப்பகுதியில் 1,200 போலீஸார் குவிக்கப்பட்டனர். வெளிநபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையத்தை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம், நாகப்பட்டு, நெல்வாய் உட்பட 13 கிராமங்களில் இருந்துஅரசுப் புறம்போக்கு இடங்கள்,விவசாய நிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகள் என மொத்தம்4,500 ஏக்கர் இடங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
ஏகனாபுரம் உட்பட 4 கிராமங்கள் இதில் முற்றிலுமாக பாதிக்கப்படுவதால் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தை மையமாக வைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் நேற்று 200-வது நாளை எட்டியது. இதனால் இந்தப் போராட்டத்தை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஏகனாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் 1,200 போலீஸார் குவிக்கப்பட்டனர். வெளியூர் நபர்கள் ஏகனாபுரம்பகுதியில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. வெளியூரில் இருந்து ஏகனாபுரம் வந்தவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதேபோல் ஏகனாபுரம் வந்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் சுங்குவார் சத்திரம் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
தி.வேல் முருகன் கண்டனம்: தமிழக வாழ்வுரிமை கட்சியின்தலைவர் தி.வேல்முருகன் நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டார். அப்போது தி.வேல்முருகன் பேசியது: மத்திய அரசின் நிர்பந்தத்துக்காக தமிழக அரசு இரட்டை நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது. தேர்தலுக்கு முன் கூறியதை பின்பற்ற வேண்டும்.
இந்த பகுதி மக்களின் வாழ்வாதாராத்தை பாதுகாக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த ஜனாயகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்கு 25,000 ஏக்கர் நிலம் வழங்கியவர்களுக்கு இதுவரை 1,300 பேருக்கு மட்டுமே வேலை கொடுத்துள்ளனர்.
மோடி அரசு தமிழ் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது. இவ்வாறு பேசினார். இந்தக் போராட்டத்தில் போராட்டக் குழுவினர், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.