தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இலங்கை பெண்ணுக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: தவறான கருத்தரிப்பு சிகிச்சையால் நிரந்தரமாக பாதிக்கப்பட்ட இலங்கை பெண்ணுக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் மருத்துவமனைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரான்ஸில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண் ப்ளோரா மதியாஸகேன் கருத்தரிப்பு சிகிச்சைக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2013 மே மாதம் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு கருப்பையில் கட்டி உள்ளதாகக் கூறி லேப்ராஸ் கோபிக் முறையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அதன் பிறகு அடி வயிற்றில் விடாமல் வலிப்பதாகவும், மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் ப்ளோரா தெரிவித்த நிலையில், அவருடைய ஒப்புதல் பெறாமலேயே இரண்டாவதாக அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

அப்போது தான் ஏற்கெனவே செய்த அறுவை சிகிச்சையால் அவரது பெருங்குடலில் சேதம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. அதன் பிறகு மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ப்ளோரா வழக்கமான தனது அன்றாடப் பணிகளை தானாக மேற்கொள்ள முடியாத அளவுக்கு நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் தனக்கு உடல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மனஉளைச்சலுக்காக ரூ.1.50 கோடி இழப்பீடாக வழங்கக் கோரி தனியார் மருத்துவமனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன், மனு தாரருக்கு தனியார் மருத்துவமனை நிர்வாகம் ரூ.40 லட்சத்தை கடந்த 2014-ம் ஆண்டு முதல் 12 சதவீத வட்டியுடன் இழப்பீடாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in