கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

Published on

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒருவரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் டில் காவலாளியாக பணிபுரிந்த ஓம் பகதூர்(51), கடந்த சில தினங் களுக்கு முன்பு கொலை செய்யப் பட்டார். எஸ்டேட் பங்களாவின் ஜன்னல் மற்றும் கதவுகள் உடைக் கப்பட்டு கொள்ளை நடந்தது.

இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்த னர். முக்கிய நபராகக் கருதப்பட்ட கனகராஜ், சாலை விபத்தில் உயிரிழந்தார். மற்றொருவரான ஷயான் விபத்தில் சிக்கி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், கடந்த 29-ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சந்தோஷ் சமி(39), தீபு(32), சதீசன்(42), உதயகுமார்(47) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் திருச்சூரைச் சேர்ந்த வாளையார் மனோஜ், அரிக்கோடு ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நேற்று ஆலப்புழாவைச் சேர்ந்த மனோஜ் சமி கைது செய்யப்பட்டார்.

மூன்று நாள் போலீஸ் காவலில் உள்ள ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலியிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவர்களை, கோடநாடு எஸ்டேட்டுக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட வேண்டும். அவரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா கோத்திகிரி காவல்நிலையத்தில் கூறியதாவது: கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் இறந்துவிட்டார், ஒருவர் விபத்தில் சிக்கி கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார். மீதமுள்ள ஒருவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள சிறையில் இருந்த ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி ஆகியோரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளதால், அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in