

‛உஜாலா’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 3 கோடி எல்இடி பல்புகளையும், 35 லட்சம் டியூப் லைட்களையும், 10 லட்சம் மின்விசிறிகளையும் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1,650 கோடி மின்சார செலவு சேமிக்கப்படும் என மத்திய அரசின் இஇஎஸ்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய அரசு நிறுவனமான எனர்ஜி எபிஷியன்சி சர்வீஸ் லிமிடெட் (இஇஎஸ்எல்) நிறுவனத்தின் தேசிய திட்ட மேலாளர் ராஜ்குமார் ராக்ரா நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எரிசக்தியை சேமிக்கும் நோக்கில் மத்திய அரசு ‛உஜாலா’ என்ற திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் மின்சாரத்தை சேமிக்கும் திறனற்ற 77 கோடி மின்சார பல்புகளை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தின் கீழ், 23.4 கோடி எல்இடி பல்புகளும், 20.6 லட்சம் எல்இடி டியூப் லைட்களும், 7.7 லட்சம் மின்விசிறிகளும் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக மின்வாரியத்துடன் இணைந்து ‛உஜாலா’ திட்டத்தின் கீழ் எல்இடி பல்புகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, எல்இடி பல்புகள் ரூ.65-க்கும், எல்இடி டியூப் லைட்கள் ரூ.230-க்கும், 5 நட்சத்திரக் குறியீடு மின்விசிறிகள் ரூ.1,150-க்கும் விற்கப்படுகின்றன. சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் இவற்றின் விலை மூன்றில் ஒரு பங்குதான். முதற்கட்டமாக சென்னையில் இந்த விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் பிற மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
ஒருவருக்கு அதிகபட்சமாக 10 எல்இடி பல்புகளும், 4 எல்இடி டியூப் லைட்களும், 2 மின்விசிறிகளும் வழங்கப்படும். இதற்காக சென்னை நகரம் முழுவதும் உள்ள அரசு மின்வாரிய அலுவலகங்களில் 60 சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பல்புகளுக்கு 3 ஆண்டுகள் வாரன்டியும், மின்விசிறிக்கு இரண்டரை ஆண்டு வாரன்டியும் வழங்கப்படும். இடையில் இந்த பல்புகள் பழுதடைந்தால் அவை இலவசமாக மாற்றித் தரப்படும்.
இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 3 கோடி எல்இடி பல்புகள், 35 லட்சம் டியூப் லைட்கள், 10 லட்சம் மின்விசிறிகள் ஆகியவற்றை விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.1,650 கோடி மின்சார செலவு சேமிக்கப்படும். அத்துடன், நாள் ஒன்றுக்கு 876 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. மேலும், 34 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு உற்பத்தியாவது தவிர்க்கப்படுகிறது.
இந்த எல்இடி பல்புகள் 25 ஆயிரம் மணி நேரம் இயங்கும் திறன் கொண்டவை. மற்ற சாதாரண பல்புகளுடன் ஒப்பிடுகையில் 10-ல் ஒரு பகுதி மட்டுமே மின்சாரம் தேவைப்படும். அதேபோல், எல்இடி டியூப் லைட்கள் 50 சதவீதம் குறைந்த மின்சாரத்தையும், மின்விசிறிகள் 30 சதவீதம் குறைந்த மின்சாரத்தையும் பயன்படுத்துகின்றன. இந்த மின்சாதனங்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தமிழகம் எரிசக்தி ஆற்றல் மிக்க மாநிலமாக உருவாகும்.
இவ்வாறு ராஜ்குமார் ராக்ரா கூறினார்.
இந்த சந்திப்பின் போது, இஇஎஸ்எல் நிறுவனத்தின் தென்மண்டல மேலாளர் சாவித்ரி சிங், தமிழக மண்டல மேலாளர் டி.ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.